இந்தியா

சாலை விபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் அகால மரணம்! நடந்தது என்ன?

ச. முத்துகிருஷ்ணன்

மும்பை அருகே நடந்த சாலை விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி தனது மெர்சிடிஸ் காரில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் என்ற இடத்தில் பிற்பகல் 3.15 மணியளவில் அவரது கார் எதிர்பாராதவிதமாக டிவைடரில் மோதியது. . சூர்யா ஆற்றின் பாலத்தில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான காரில் நான்கு பேர் இருந்ததாகவும், அவர்களில் சைரஸ் மிஸ்திரி உட்பட இருவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். காயம் அடைந்த கார் டிரைவர் உட்பட இருவர் குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்டோபர் 2016 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் குழும தலைவர் பதவியில் இருந்து முறைகேடு புகார் காரணமாக சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மறைவு குறித்து அதிர்ச்சியடைந்தேன். அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மட்டுமல்ல, தொழில்துறையில் ஒரு இளம், பிரகாசமான மற்றும் தொலைநோக்கு ஆளுமையாகவும் காணப்பட்டார். இது ஒரு பெரிய இழப்பு... என் இதயப்பூர்வமான அஞ்சலி.” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "சைரஸ், கருணையின் உருவகம். நான் அவரை எப்போதும் நினைவில் வைத்திருப்பதால், அவரது மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.