தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91.
ஹரியானாவின் அடேலி பகுதியில் 1925ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி பிறந்த பர்னாலா, லக்னோவில் சட்டம் பயின்றவர். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தியால் கடந்த 1942ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு விடுதலைக்காக போராடியவர். இவர் 1990-91 மற்றும் 2004-2011-ஆம் ஆண்டு வரை தமிழக ஆளுநராக பணியாற்றினார். மேலும், வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் ராசாயனத் துறை அமைச்சராகவும் பணியாற்றிய சுர்ஜித் சிங் பர்னாலா, உத்ராகண்ட், ஆந்திர மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியவர். உடல்நலக்குறைவு காரணமாக சண்டிகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று மாலை மரணமடைந்தார்.