முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் காலமானார்.
கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங், மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தது. எனினும், நேற்று இரவு 9.15 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி மன்மோகன் சிங் காலமானார். இதையடுத்து, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் மூத்த தலைவர்களான பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, மன்மோகன் சிங்கின் உடல், அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்த, காலை 11 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. இதேபோல், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, கட்சி சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளையும், அடுத்த ஏழு நாட்களுக்கு ரத்து செய்வதாக, காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த ஏழு நாட்களும், கட்சிக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங்கின் உடல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு நாளை கொண்டு வரப்படுகிறது. மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடல் வைக்கப்பட இருக்கிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த இந்தியா முழுவதிலும் இருந்து அரசியல் கட்சித் தலைவர்களும், முதலமைச்சர்களும் டெல்லி புறப்பட்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார். அவர் செல்லக்கூடிய விமானத்திலேயே திமுக எம்பி கனிமொழியும் டெல்லி செல்ல இருக்கிறார்.,
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இன்று முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. துக்கம் அனுசரிக்கப்படும் 7 நாட்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
“கண்ணியத்தின் வடிவமாய்த் திகழ்ந்த மன்மோகன் சிங்கின் மறைவு தேசத்திற்கு பேரிழப்பு. பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக மிக உறுதியாக நின்றவர் மன்மோகன் சிங்” - மனித நேய மக்கள் கட்சித் தலைவர்
டெல்லியில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் இல்லத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் வருகை தந்தனர்..
மன்மோகன் சிங்கின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். உடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.. பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மன்மோகன் சிங்கின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு எனத்தெரிவித்தார்.