முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
நாட்டின் 70வது குடியரசு தினவிழா நாளை (ஜனவரி 26) கொண்டாடப்படவுள்ளது. நாளை டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், தமிழக ஜார்ஜ் கோட்டையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் கொடியேற்றவுள்ளனர். 70வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, இன்று இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் உரையாற்றினார். அதில், “இந்தத் தருணத்தில் நாட்டு விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களை நாம் நினைவு கூறவேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றையும் நாட்டு மக்கள் நினைக்க வேண்டும். சுதந்திரத்திற்காக போராடிய காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்களின் தியாகங்களை போற்ற வேண்டும்.
70வது குடியரசு தினம் கொண்டாடவுள்ள நிலையில், டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா புரட்சி செய்துள்ளது. இந்திய விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை உபயோகிக்கித்து வருகின்றனர். கல்வித்துறையில் மாணவர்களை விட மாணவிகள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர். கல்வி, அறிவியல், மருத்துவம், விளையாட்டு என அனைத்துத்துறைகளிலும் பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் உள்ளனர்” என தெரிவித்தார்.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். அத்துடன் சமூக சேவகர் நனாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.