என்கவுண்டர்
என்கவுண்டர் file image
இந்தியா

அதிர்ந்த துப்பாக்கி சத்தம்! Ex. MP & பிரபல தாதா மகன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை! உபியில் பரபரப்பு

Prakash J

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏவான ராஜு பால், கடந்த 2005ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அம்மாநிலத்தின் பிரபல தாதாவான அதிக் அகமது உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர். அதேநேரத்தில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக வழக்கறிஞர் உமேஷ் பால் என்பவர் இருந்தார்.

படுகொலை

இந்த நிலையில், உமேஷ் பால் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டார். அவரைப் பாதுகாத்து வந்த பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் புயலைக் கிளப்பியது. எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்தால் பாஜக ஆட்சிக்கு பெரும் அவப்பெயரும் ஏற்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.பி அதிக் அகமது சேர்க்கப்பட்டார். இவர், உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யராஜ் பகுதியைச் சேர்ந்தவர். இவர், அம்மாநில போலீசாருக்கே சவால்விடும் வகையில் பல குற்றங்களைச் செய்ததாகவும், பிரபல தாதாவாகவும் விளங்கினார் எனக் கூறப்படுகிறது.

குற்ற வழக்கு

அதிக் அகமது மீது உமேஷ் பால் கொலை வழக்கு தவிர, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் என 100க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. என்றாலும், உமேஷ் பால் கொலை வழக்கில் அதிக் அகமது கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக சிசிடிவி வீடியோ காட்சிகளின் அடிப்படையில் அதிக் அகமதுவின் மகன் ஆசாத் அகமதுவும் சேர்க்கப்பட்டிருந்தார். போலீசார் அவரை வலைவீசி தேடிய நிலையில் ஆசாத் அகமது தலைமறைவாகிவிட்டார். அதாவது, உமேஷ் பால் கொல்லப்பட்ட பிறகு, ஆசாத் அகமது முதலில் லக்னோவிற்கும், அதன்பிறகு கான்பூர், மீரட் எனச் சென்று இறுதியில் டெல்லியில் பதுங்கி இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், ஆசாத், மத்தியப் பிரதேசத்துக்கு தப்பிச் செல்ல இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

என்கவுண்டர்

மாநில எல்லையைக் கடப்பதற்காக அவர், இன்று மாறுவேடத்தில் ஜான்சி அருகே சென்றுள்ளார். இத்தகவல் அறிந்த 12 பேர் கொண்ட போலீஸ் குழு, ஆசாத் அகமதுவை ஜான்சி அருகே சுற்றி வளைத்தது. அப்போது ஆசாத் அகமது கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் ஆசாத் அகமது, அவரது நெருங்கிய கூட்டாளியான குலாம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களும், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. உத்தரப்பிரதேசத்தில், பிரபல தாதா மகன் ஆசாத் அகமது என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.