இந்தியா

கட்டுமானத் தொழிலாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய முன்னாள் அமைச்சர்

கட்டுமானத் தொழிலாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய முன்னாள் அமைச்சர்

sharpana

கட்டுமானத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி  காட்டி மிரட்டியதால் தெலங்கானா மாநில முன்னாள் அமைச்சர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் டி.ஆர்.எஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் குட்டா மோகன் ரெட்டி நல்கொண்டா மாவட்டத்தில் கால்வாய் அகலப்படுத்துவது தொடர்பாக தொழிலாளர்களை துப்பாக்கிமூலம் அச்சுறுத்தியது பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் குவித்துள்ளது.

நல்கொண்டா மாவட்டத்தில் உருமட்லா என்ற கிராமத்தில் முன்னாள் அமைச்சர் குட்டா மோகன் ரெட்டியின் நிலம் இருக்கிறது. கால்வாய் அமைப்பதற்காக அரசால் இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில்தான், பில்லிபள்ளி கால்வாய் கட்டும் பணியில் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியாற்றத் தொடங்கினார்கள்.

ஆனால், திடீரென அந்த இடத்திற்கு வந்த குட்டா, கட்டுமான பணியாளர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு இன்னும் இழப்பீட்டுத் தொகை மீதம் வைத்திருந்ததே, குட்டாவின் செயலுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. மக்கள் பிரதிநிதியாக இருந்தவர் இழப்பீட்டு தொகையை எப்படி வாங்கவேண்டும் என்று தெரியாமல் துப்பாக்கியைக் காட்டி ஒப்பந்தக்காரர், கட்டுமானத் தொழிலாளர், ஜே.சி.பி ஆபரேட்டர் ஆகியோரை விரட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு ஆந்திரா தெலங்கானா முழுக்க பெரும் கண்டனங்கள் குவிந்ததால் ஆயுதச்சட்டம் 30 வது பிரிவின் கீழ் விதியை மீறியதற்காக தண்டனை மற்றும் 503 பிரிவின்கீழ் கிரிமினல் மிரட்டல், 323 பிரிவின்கீழ் தானாக முன்வந்து காயப்படுத்தியதற்கான தண்டனை, 341 பிரிவின் கீழ் தவறான தண்டனை என பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.இந்திய தண்டனைச் சட்டம் 506 பிரிவின் குற்றவியல் மிரட்டல் விடுத்தவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிகிறது.