ரோஹிண்டன் நாரிமன்
ரோஹிண்டன் நாரிமன் pt web
இந்தியா

“ஜனநாயகத்திற்கான ஆபத்து” தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக முன்னாள் நீதிபதி கருத்து

Angeshwar G

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம் என்பது ஆளும் மத்திய அரசுக்கு ஏற்றவாறு இருப்பதாக கூறி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தது.

இந்த மசோதா மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை தேர்வு செய்யும் குழுவில் தலைமை நீதிபதிக்கு பதில் மத்திய அமைச்சரை இடம்பெறச் செய்வதற்கான திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த மசோதா தாக்கலின்போதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த மசோதா தொடர்பான விவாதத்தின் போதும் உறுப்பினர்களுக்கு போதுமான நேரம் அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் முழுவதும் ஆளும் தரப்புக்கே செல்லும் என்ற குற்றஞ்சாட்டப்பட்டது. மசோதா நிறைவேறியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பும் செய்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன், “இது கவலை அளிக்கிறது. தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரை நியமிப்பது மிகவும் குழப்பமான அம்சம். தேர்தல் ஆணையர் நியமன மசோதா, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும். இந்த மசோதா சட்டமானால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.