இந்தியா

ஆம் ஆத்மி சார்பில் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு?

ஆம் ஆத்மி சார்பில் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு?

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விரைவில் ராஜ்யசபா உறுப்பினராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 92 தொகுதிகளை ஆம் ஆத்மி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த மாதம் அந்த மாநிலத்தின் சார்பில் தற்போது உறுப்பினர்களாக உள்ள ஐந்து ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. அதையடுத்து காலியாக உள்ள அந்த இடங்களை ஆளும் தரப்பான ஆம் ஆத்மி நிரப்ப உள்ளது. அதில் ஒருவராக ஹர்பஜன் தேர்வு செய்யப்படுவார் என்றே தெரிகிறது. 

“மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், புதிதாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள எனது நண்பர் பகவந்த் மானுக்கும் வாழ்த்துகள். பகத் சிங்கின் பூர்வீக கிராமத்தில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளது சிறப்பு. இது நம் எல்லோருக்கும் பெருமையான தருணம்” என ஹர்பஜன் தெரிவித்துள்ளார். 

விரைவில் ராஜ்யசபா உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட உள்ளவர்களின் பெயரை ஆம் ஆத்மி வெளியிடும் என தெரிகிறது. இதன் மூலம் தற்போது மாநிலங்களவையில் 3 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் பலம் 8 என அதிகரிக்கும். ஜலந்தரில் அமைய உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தை கமெண்ட் செய்கிற பொறுப்பையும் ஹர்பஜன் கவனிப்பார் என தெரிகிறது.