திவ்யா மிட்டல் AI
இந்தியா

’ஜன்நிதி பாரத்’ புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார் Ex IAS.. திவ்யா மிட்டலின் அதிரடித் திட்டம்!!

சமீபத்தில் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்திருந்த திவ்யா மிட்டல் '‘ஜன்நிதி பாரத்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

Premkumar S

இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் மாவட்ட ஆட்சிய திவ்யா மிட்டல் (Divya Mittal) தான் அரசியலில் களமிறங்கப்போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்தச்சூழலில் தான், தற்போது 'ஜன்நிதி பாரத்' (Janniti Bharat Party) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். மேலும், வரும் 2027 உத்தரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி களமிறங்கும் என்றும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இந்தியாவில் கட்சிகளுக்குக் பஞ்சமில்லை என்றும், மக்களின் குரலைக் கேட்பதற்கான மனப்பான்மைக்கே பஞ்சம் நிலவுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சாதி, மதம் அல்லது சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், கொள்கை உருவாக்கத்தில் மக்களின் அன்றாட அனுபவங்களும் தேவைகளுமே முதன்மைப்படுத்தப்படும். விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று வல்லுநர்களின் உதவியோடு திட்டங்கள் தீட்டப்படும்.

உள்கட்டமைப்புத் திட்டங்களின் வடிவமைப்பில் பொதுமக்கள் நேரடியாகப் பங்கேற்க வழிவகை செய்யப்படும். குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பற்றதாக உணரும் இடங்களை மொபைல் செயலி மூலம் சுட்டிக்காட்டினால், அவ்விடங்களில் முன்னுரிமை அடிப்படையில் மின்விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.கிராமப்புறங்களில் நடக்கும் கழிவுநீர் பாதை, சாலை, குடிநீர் திட்டங்கள் முதல் பள்ளி மற்றும் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் வரை அனைத்தையும் பொதுமக்கள் மொபைல் செயலி மூலம் கண்காணிக்கும் டிஜிட்டல் முறை கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

திவ்யா மிட்டல்

ஹரியாணா மாநிலம் ரோவாரியைச் சேர்ந்த திவ்யா மெட்டல், 1983 நவம்பர் 23ல் பிறந்தவர். 2013-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஐஐடி டெல்லி மற்றும் ஐஐஎம் பெங்களூரு ஆகிய புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றார். இவரது பணிக்காலத்தில் மிர்சாபூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலம் மிக முக்கியமானது. குடிநீர் வசதி இல்லாத 'லஹுரியா தா' (Lahuria Dah) என்ற மலைக்கிராமத்திற்கு மாதக்கணக்கில் போராடி குழாய் மூலம் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்தார். இவ்வாறு, இவரது அதிரடி நடவடிக்கைகள் மூலம், மக்களிடமும் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றார். 13 ஆண்டுகள் அரசு நிர்வாகத்தில் பணியாற்றிய அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.