இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமாக இருந்தவர் சஞ்சய் பாங்கர். இவருடைய மகன், ஆர்யன். இவர், தற்போது பெண்ணாக மாறியுள்ளார். தவிர, தனது பெயரையும் அனயா என மாற்றிக்கொண்டு உள்ளார். இதுகுறித்து அவர், கடந்த ஆண்டு இறுதியில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தகவலைத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ”கிரிக்கெட் வீரர்கள் சிலர் தனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பினர்” என அனயா தெரிவித்துள்ளார். சமீபத்திய உரையாடல் ஒன்றில் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளார். அதில், “எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதாக இருந்தபோது, என் அம்மாவின் அலமாரியில் இருந்து துணிகளை எடுத்து அணிவேன். பின்னர், கண்ணாடியைப் பார்த்து, 'நான் ஒரு பெண். நான் ஒரு பெண்ணாக இருக்க விரும்புகிறேன்' என்று சொல்வேன். முஷீர் கான், சர்பராஸ் கான், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற சில பிரபலமான கிரிக்கெட் வீரர்களுடன் நான் விளையாடி உள்ளேன். அப்பா நன்கு அறியப்பட்ட நபர் என்பதால் நான் என்னைப் பற்றி ரகசியமாக வைத்திருக்க வேண்டியிருந்தது. கிரிக்கெட் உலகம் பாதுகாப்பின்மை மற்றும் நச்சு ஆண்மையால் நிறைந்துள்ளது.பாலின அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு எனக்கு ஆதரவும் இருந்தது. அதேநேரத்தில் சில துன்புறுத்தல்களும் இருந்தன, சில கிரிக்கெட் வீரர்கள் அவர்களுடைய நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்பினர். இதில் ஒரு நபர், என் அருகில் வந்து அமர்ந்து என் புகைப்படங்களைக் கேட்பார். இதுகுறித்து மூத்த கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் சொன்னேன். அவர், ’காரில் போகலாம், நான் உன்னுடன் தூங்க விரும்புகிறேன்’ என்று சொன்னார்” என அதில் தெரிவித்துள்ளார். அவருடைய இந்தக் கருத்து கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையைப் போலவே, அனயாவும் உள்ளூர் கிளப் கிரிக்கெட்டில் இஸ்லாம் ஜிம்கானாவை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார். இதுதவிர, இடது கை பேட்ஸ்மேன் லீசெஸ்டர்ஷையரில் உள்ள ஹின்க்லி கிரிக்கெட் கிளப்பிற்காகவும் அவர் விளையாடியுள்ளார். இருப்பினும், நவம்பர் 2023இல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) திருநங்கை விளையாட்டு வீரர்கள் பெண்கள் கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அனயா தற்போது மான்செஸ்டரில் வசித்து வருகிறார். எனினும், இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.