இந்தியா

ரஞ்சன் கோகாய்க்கு அன்று எம்.பி. பதவி... இன்று இசட் பிளஸ் பாதுகாப்பு?!

webteam

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். இவர் தற்போது மாநிலங்களவை எம்பியாகவும் இருக்கிறார். இவருக்கு விரைவில் மத்திய அரசின் `இசட் பிளஸ்’ விஐபி பாதுகாப்பு வழங்கப்பட இருப்பதாக 'தி பிரின்ட்' தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

66 வயதான கோகோய், இனி நாடு முழுவதும் பயணம் செய்யும்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) ஆயுதமேந்திய கமாண்டோக்களால் பாதுகாக்கப்படுவார் என்று தங்களுக்கு தெரிந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 46-வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரஞ்சன் கோகாய், 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 2019-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி வரை பணியில் இருந்தார். இவர் தலைமை நீதிபதியாக இருந்த காலகட்டத்தில் அயோத்தி ராமர் கோயில் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்பின் நீதித்துறையில் இருந்து நேரடி அரசியலுக்குள் நுழைந்தார் ரஞ்சன் கோகாய். மத்திய பாஜக அவருக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கியுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு பெரும்பாலும் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் போன்ற கௌரவ பதவிகள் அல்லது ஏதேனும் ஒரு கமிஷனுக்கு தலைமை வகிப்பது போன்ற பொறுப்புகள் வழங்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகின்றது.

ஆனால், ஓய்வு பெற்ற 4 மாதங்களிலேயே ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு அப்போதே பல உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளே அதிருப்தி தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, அசாம் மாநிலத்தில் அடுத்து நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் ரஞ்சன் கோகாய் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று பேச்சும் உள்ளது.