இந்தியா

2ஜி வழக்கில் தவறான தகவல்: முன்னாள் காங்கிரஸ் எம்.பியிடம் மன்னிப்பு கோரிய வினோத்ராய்

JustinDurai
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி, சஞ்சய் நிருபமிடம், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
மத்தியில் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை அளித்தது. அதன் தலைமை அதிகாரியாக இருந்த வினோத் ராய் கடந்த 2014 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, ஊழல் தொடர்பான விசாரணையில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரை சேர்க்கக் கூடாதென, அப்போதைய காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிருபம் தன்னை நிர்பந்தித்ததாக கூறியிருந்தார்.
இதையடுத்து வினோத் ராய் மீது டெல்லி நீதிமன்றத்தில் சஞ்சய் நிருபம் அவதூறு வழக்கு தொடர்நதார். இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த வினோத் ராய், தொலைக்காட்சிப் பேட்டியில் தாம் பேசியதில் உண்மையில்லை என்று குறிப்பிட்டு மன்னிப்பு கோரியுள்ளார். இந்த பிரமாணப் பத்திரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சஞ்சய் நிருபம், தவறான தகவல் அளித்ததற்காக, வினோத் ராய் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.