இந்தியா

மகள் அன்பிற்கு ஈடில்லை.. லாலுவுக்கு கிட்னி தானம் அளிக்கும் ரோகிணி

webteam

முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு அவரது மகள் ரோகிணி  சிறுநீரகம் தானம் அளிக்க முன்வந்துள்ளார்.

சிங்கப்பூரில் வசிக்கும் ரோகிணி  ஆச்சாரியா சிறுநீரகம் தானம் அளிக்க முன்வந்திருப்பதை தொடர்ந்து, லாலுவுக்கு சிங்கப்பூரில் இந்த மாத இறுதியில் சிறுநீரக மாற்று சிகிச்சை நடைபெறும் என ராஷ்டிய ஜனதா கட்சி தலைவர்கள் தகவல் அளித்துள்ளனர். முன்னாள் பீகார் முதல்வர் லாலுவின் இரண்டாவது மகளான ரோகிணி சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற லாலு பிரசாத் யாதவ் சென்ற மாதம் சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில், ரோகினியின் சிறுநீரகம் லாலுவுக்கு பொருந்தும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்கு பிறகு இந்தியா திரும்பிய லாலு தற்போது சர்க்கரை நோய் மற்றும் ஹைப்பர்டென்ஷன் உபாதைகளுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

ரோகிணி  தன்னுடைய சிறுநீரகங்களில் ஒன்றை லாலுவுக்கு தானம் அளிக்க முன்வந்திருப்பதை தொடர்ந்து, சிங்கப்பூரிலேயே இதற்கான அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அதன் பிறகு லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூரில் குறைந்தபட்சம் இரண்டு வாரம் தங்கி சிகிச்சை பெறுவார் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். லாலுவின் மனைவி ரபரி  தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் சிங்கப்பூர் செல்ல உள்ளனர். தேஜஸ்வி யாதவ் தற்போது பிஹார் துணை முதல்வராக உள்ளார் என்பதும் ரபரி தேவி முன்னாள் பீகார் முதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாலு பிரசாத் யாதவ் பல வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருந்த சமயத்திலும் பலமுறை நீதிமன்ற அனுமதி பெற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் சென்ற மாதம் சிங்கப்பூர் சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்ட லாலு பிரசாத் யாதவ் சமீபத்தில் நாடு திரும்பினார். லாலு-ரபரி தம்பதியினருக்கு மிசா பாரதி உள்ளிட்ட ஏழு மகள்கள் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்ட இரண்டு மகன்கள் என மொத்தம் ஒன்பது சந்ததியினர் உள்ளனர்.

- கணபதி சுப்ரமணியம்

இதையும் படிக்கலாமே: அதிர்ச்சி வீடியோ: ஆர்டர் செய்த பிரியாணி வர தாமதம் - ஹோட்டல் ஊழியரை சரமாரியாக தாக்கிய நபர்