இந்தியா

முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சாரப்ஜீ கொரோனாவுக்கு உயிரிழப்பு!

Sinekadhara

இந்தியாவின் மிகச்சிறந்த சட்டவல்லுநர்களில் ஒருவராகக் கருதப்பட்ட முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சாரப்ஜீ கொரோனாத் தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 91.

இவர் 1930ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். 1953ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சிபெற்ற இவர், 1971ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார். முதலில் 1989ஆம் ஆண்டு மற்றும் 1998 முதல் 2004 வரை வழக்கறிஞர் ஜெனராலாகப் பணியாற்றினார்.

மனித உரிமைகள்மீது அதிக நாட்டம் கொண்டவரான சாரப்ஜீ, நைஜீரியாவிற்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளராக 1997 இல் நியமிக்கப்பட்டார். மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான ஐ.நா. துணை ஆணையத்தில் சேர்ந்த இவர், 1998 முதல் 2004 வரை அதன் தலைவராகவும் இருந்தார். சிறுபான்மை இனப் பாகுபாடு மற்றும் பாதுகாப்பு தடுப்பு தொடர்பான ஐ.நா துணை ஆணையத்தின் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார்.

மேலும், சோரப்ஜி ஐ.நா. உலக நீதிமன்றத்தில் நிரந்தர நீதிமன்ற நடுவராக 2000 முதல் 2006 வரை பணியாற்றினார். அதன்பிறகு, 2002ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்யும் ஆணையத்தில் உறுப்பினரானார்.

உச்சநீதிமன்றத்தில் பல முக்கிய வழக்குகளைத் தீர்த்துவைத்த இவர், பேச்சுரிமை மற்றும் பத்திரிகை உரிமைக்காகவும் வாதாடியுள்ளார். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சோரப்ஜிக்கு பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.