இந்தியா

கேரள தலைமைச்செயலக தீவிபத்துக்கு மின்கசிவு காரணமல்ல: தடயவியல்துறை

Veeramani

தங்கக்கடத்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த கேரள தலைமைசெயலக ‘ப்ரோட்டாகால்’ அலுவலக தீவிபத்துக்கு, மின்கசிவு காரணம் இல்லை என்று தடயவியல்துறை தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள தலைமைச் செயலகத்தில் இயங்கும் அரசு நெறிமுறைகளை வழிகாட்டும் "ப்ரோட்டா கால்" அலுவலகத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அலுவலகத்தில் உள்ள சிறிய தீயணைப்பு கருவிகளைக் கொண்டு சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது. இருந்தாலும் அலுவலகத்தில் இருந்த சில கோப்புகள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.

கேரள அரசு இது குறித்து அரசின் தலைமைச் செயலர் விஸ்வா மேத்தா தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவினர் தீ விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டதில், இந்த தீ விபத்து அலுவலகத்தில் இருந்த பழைய மின்விசிறியில் ஏற்பட்ட மின் கசிவால் ஏற்பட்டது எனவும், அந்த மின் கசிவார் வயர்கள் உருகி, நேர் கீழே இருந்த ஜன்னல் திரைத்துணிகளில் விழுந்து அறைக்குள் தீ பரவியதாக தெரிய வந்தது” என்றும், இது குறித்த அறிக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

தீவிபத்து நடந்த "ப்ரோட்டாக்கால்" அலுவலகத்தில் எரிந்துபோனதாக கூறப்படும் ஆவணங்கள் கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பானவை எனவும், ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு வரும் பார்சல்களுக்கு இந்த அலுவலகம் மூலம் தான் 'க்ளீயரன்ஸ்" சான்று வழங்கப்படும் எனவும், அது குறித்த ஆவணங்கள் வேண்டுமென்றே எரிக்கப்பட்டுள்ளன எனவும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைத்து தொடர் போராட்டம் நடத்தி வந்தன.

இந்த தீ விபத்து குறித்து கேரள தடயவியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் அறிக்கை வந்தபின்பு தான் தீ விபத்திற்கான காரணம் தெரியவரும் என காத்திருந்த நிலையில், கேரள அரசின் தலைமைச் செயலக தீ விபத்திற்கு "மின் கசிவு காரணமல்ல" என்று தடயவியல் துறை சார்பில், அதன் ஆய்வறிக்கை திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள அரசின் தலைமைச் செயலர் தலைமைச் செயலர் தலைமையிலான ஆய்வுக்குழுவினரின் அறிக்கை பொய்யாகியுள்ளது.

ஏற்கனவே தங்க கடத்தல் தொடர்பான ஆவணங்களை அழிப்பதற்கான கேரள அரசின் முயற்சிதான் இந்த தலைமைச் செயலக தீ விபத்து என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், தடயவியல் துறையின் ஆய்வறிக்கை கேரள அரசியலில் சர்ச்சைக்குரியதாகவும், விவாத பொருளாகவும் மாறியுள்ளது.