கால்பந்து போட்டியில் ஏற்பட்ட கலவரம்
கால்பந்து போட்டியில் ஏற்பட்ட கலவரம் PT
இந்தியா

கேரளாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட கலவரம்... தாக்கப்பட்ட கருப்பின வீரர்! #ViralVideo

Jayashree A

கேரள மாநிலம் அரிகோட்டில் செவன்ஸ் புட்பால் என்று அழைக்கப்படும் 5 - 7 பேர் பங்கேற்கும் உள்ளூர் கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் விளையாட ஏராளமான ஆப்பிரிக்க நாட்டு கால்பந்து வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சொந்த ஊரில் கடும் வறுமையில் சிக்கித் தவிக்கும் இந்த வீரர்கள், இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும் போது ஓரளவுக்கு நல்ல ஊதியத்தை பெறுகின்றனர். இதன் காரணமாகவே அவ்வபோது இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக அவர்கள் வருகை தருகின்றனர் என சொல்லப்படுகிறது.

தாக்கப்பட்ட ஹசானே

அப்படி இந்த வருடம், ஐவரி கோஸ்ட்டை சேர்ந்த கருப்பின கால்பந்து வீரர்கள் இந்த கால்பந்து போட்டிகளில் கலந்துக்கொள்வதற்காக கேரளாவின் அரிகோட்டிற்கு வந்திருந்தனர். அந்த கருப்பின கால்பந்து வீரர்களில் ஒருவரான டேரசவுபா ஹசானே ஜூனியர் என்பவரை ஒரு கும்பல் விரட்டி தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அவ்வீரர் காயமடைந்துள்ளார்.

தாக்கப்பட்ட ஹசானே, அம்மக்கள் தம்மை இனத்தை கூறி திட்டி அடித்ததாக குற்றம்சாட்டி உள்ளார். அவரை வெள்ளை டீஷர்ட் அணிந்த மற்றொருவர் பாதுகாத்து மக்களிடம் பேசுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து ஹசானே காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதில் கார்னர் கிக் செய்யும் போது தமக்கு பின்னாலிருந்த கும்பல் தம்மை இனரீதியாக அவமரியாதையாக பேசியதாகவும் கற்களை வீசி தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் ஹசானேதான் தங்களில் ஒருவரை எட்டி உதைத்ததாகவும் அதனாலேயே அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பார்வையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.