Cafe Coffee Day
Cafe Coffee Day  Cafe Coffee Day twitter
இந்தியா

உச்சக்கட்ட நஷ்டத்தில் இருந்து கம்பேக் கொடுத்த ’கஃபே காபி டே’-சென்ற காலாண்டில் லாபத்தை அள்ளி அசத்தல்!

Prakash J

கஃபே காபி டே நிறுவனத்தின் லாபம்

கஃபே காபி டே நிறுவனத்தின் லாபம் குறித்த செய்திகள்தான் இன்று இணையம் மற்றும் ஊடக உலகில் முக்கியச் செய்தியாக வலம் வருகின்றன.

கஃபே காபி டே நிறுவனம் 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான ஏப்ரல் மற்றும் ஜூன் காலாண்டு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி கஃபே காபி டே இந்த காலாண்டில் 24.57 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் அதே காலகட்டத்தில் 11.73 கோடி நஷ்டத்தை பதிவு செய்த இந்த நிறுவனம் தற்போது மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளது.

20% உயர்ந்த பங்குகளின் விலை!

காபி டேவின் பங்குகளின் விலை இன்று 20 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டது. பங்குச் சந்தையின் தொடக்கத்தில் ரூ39.01 ஆக இருந்த பங்குகளின் விலை, அதிகபட்சமாக ரூ.46.81 வரை சென்றது. குறைந்தபட்சம் ரூ.38.40 வரை இருந்தது.

கடன் பிரச்னையில் சிக்கித் தவித்த நிறுவனம்

அதனைப் போலவே கஃபே காபி டே நிறுவனத்தின் வருவாயும் 189.63 கோடியிலிருந்து 223.20 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கஃபே காபி டே நிறுவனத்தின் லாபம் குறித்த செய்திகள்தான் இன்று இணையம் மற்றும் ஊடக உலகில் முக்கியச் செய்தியாக வலம் வருகின்றன. அதற்குக் காரணம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிறுவனம் 7,000 கோடி அளவிலான கடன் தொகையில் சிக்கித் தவித்தது.

மறுபுறம் அந்நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டார். இதனால் அந்நிறுவனத்தின் எதிர்காலமே அன்று இருள் சூழ்ந்திருந்த நிலையில்தான், இன்று லாபம் சம்பாதித்திருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக இருக்கிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை இங்கே அறிவோம்.

கபே காபி டே நிறுவனத்தின் உரியமையாளராக இருந்தவர் யார்?

வெளிநாடுகளுக்கு ஒரு ஸ்டார் பக்ஸ் என்றால், இந்தியாவுக்கு கஃபே காபி டே. இதன் உரிமையாளராக இருந்தவர்தான் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் காபி டே உட்பட சில நிறுவனங்களை நடத்திவந்தார். சுமார், 3,000 ஏக்கர் காப்பி தோட்டங்கள், நாடெங்கும் 1,600 காபி டே கடைகள் என இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனராக வலம்வந்தவர் வி.ஜி.சித்தார்த்தா.

வி.ஜி.சித்தார்த்தா

2019ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட சித்தார்த்தா

அந்த அளவுக்கு பிரபலமான இந்த நிறுவனத்தின் முதல் கடை 1996ஆம் ஆண்டு பெங்களூருவில் திறக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை வைத்திருக்கும் ஒரு பெரிய வணிகக் குழுவாக வளர்ந்தது. ஒரு கட்டத்தில் கடைகளின் எண்ணிக்கையுடன், கடனும் கூடியது. இந்த நிலையில்தான் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் தேதி சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றங்கரையோரம் மாயமானார்.

அவரை போலீசார் தேடிவந்த நிலையில் 36 மணி நேரத்துக்குப் பிறகு அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் உடற்கூராய்வு செய்யப்பட்ட அவரது உடல் அவரது காபி எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட்டது.

பொறுப்புக்கு வந்த சித்தார்த்தா மனைவி மாளவிகா

கழுத்தை நெரிக்கும் கடன், வெளி அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால் சித்தார்த் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தெரிவித்தது. கபே காபிடே என்ற சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் கபே காபி டே நிறுவனம், சித்தார்த்தின் மரணத்துக்குப் பின் திண்டாடிப்போனது. அவர், இறந்த பிறகு, காபி டே நிறுவனத்துக்கு 7000 கோடி ரூபாய் கடன் இருந்தது. என்ன செய்வது என குடும்பமே தத்தளித்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார், சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா.

மாளவிகா

வங்கிகளிடம் அவகாசம் வாங்கிய மாளவிகா

சித்தார்த்தா இறப்புக்குப்பிறகு கஃபே காபி டேவின் வரலாறு இத்தோடு முடிந்துவிட்டது என எண்ணிக்கொண்டிருந்தவர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றி எழுதியவர் மாளவிகா. ஒருபுறம் கணவரின் இறப்பு; மறுபுறம் நிறுவனத்தின் கடன். இதனால் அவர் மிகப்பெரிய சவால்களையும் சிக்கல்களையும் எதிர்கொண்டார். இருந்தாலும் அதிலிருந்து எப்படித் தப்பிப்பது எனச் சிந்தித்தார். அதன் பயனாக கடன் தொகையைச் சிறிதுசிறிதாக அடைத்தார். பெரிய கடன்களை அடைக்க வங்கிகளிடம் அவகாசம் வாங்கினார்.

Cafe Coffee Day

அதேபோல கடன் பெற்றவர்களை சந்தித்து, 'உங்கள் கடன்கள் நிச்சயம் திருப்பி செலுத்தப்படும்' என உறுதியளித்தார். சொன்ன சொல்லை காப்பாற்ற அயராத உழைப்பையே துணையாக கொண்டு துடுப்பை செலுத்தினார்.

மூலதனத்தை அதிகரிப்பதில் கவனம்

அதன்படி, தேவையற்ற, லாபம் தராத இடங்களில் இருந்த காஃபி டே கிளைகளுக்கு மூடு விழா நடத்தினார். அதற்கு மாற்றாக, மக்கள் விரும்பும் இடங்களை தேர்வு செய்து, முக்கியமான மால்கள், ஐடி பார்க்குகள், உள்ளிட்ட இடங்களில் புதிய கிளைகளை திறந்து நம்பிக்கை பாய்ச்சினார். புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதன் மூலம் நிறுவனத்திற்கு மூலதனத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினார். கொரோனா லாக்டவுன் நாட்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

Cafe Coffee Day

அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்று!

அவரின் தொடர் உழைப்புக்கு கைமேல் பலன் கிட்ட ஆரம்பித்தது. மாளவிகாவின் தொடர் முயற்சியின் விளைவாகக் கொஞ்ச கொஞ்சமாக கடனை அடைத்து வணிகத்தின் வெற்றிக்கு வித்திட்டார். நிறுவனத்தின் கடனைக் குறைப்பதிலும், அதன் எதிர்காலத்தைப் பாதுகாப்பதிலும் மாளவிகா பெற்ற வெற்றி, மறைந்த கணவரின் கனவின் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கைக்கு சான்றாக அமைந்துள்ளது.