இந்தியா

முடங்கியது ஸ்விக்கி - சொமாட்டோ செயலிகள்... சமூகவலைதளங்களில் வாடிக்கையாளர்கள் புகார்

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் அமேசான் வெப் சர்வீஸின் சேவைகள் முடங்கியதை தொடர்ந்து, இந்தியா முழுக்க உணவு டெலிவரி நிறுவனங்களான சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்களின் சேவை முடங்கியுள்ளது.

downdetector.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் தொழில்நுட்பங்கள் எதுவும் செயலிழந்தால் அதுகுறித்து டெக்னிக்கலாக ஆராய்ந்து உறுதிசெய்யப்படும். அந்த இணையதளத்தின் தகவலின்படி, அமேசான் வெப் சர்வீஸ் இன்று மதியம் 2 மணி முதல் செயல்படவில்லை என்று பல்வேறு புகார்கள் அவர்களுக்கு வந்திருக்கிறது. ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் இதுதொடர்பான பல்வேறு புகார்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

அமேசான் வெப் சர்வீஸை தொடர்ந்து, ஸ்விக்கி - சொமாட்டோவிலும் செயலிகள் முடங்கியதாக கூறப்படுகிறது. உணவு செயலிகளான அவ்ற்றில், தங்களால் எந்தப் பொருளையும் ஆர்டர் செய்யவோ - பொருள் பட்டியலை முழுமையாக பார்க்கவோ முடியவில்லை என வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

தொடர்ந்து பல பயனாளர்களும் குற்றச்சாட்டை முன்வைத்ததை தொடர்ந்து, இரு நிறுவனமும் தனித்தனியே அவர்களுக்கு பதிலளித்துள்ளது. அந்தவகையில் அந்நிறுவனங்கள் தரப்பில், “எங்களுக்கு சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரச்னையை சரிசெய்ய வேலை செய்து வருகின்றனர். விரைவில் பிரச்னை சரிசெய்யப்படும். அதுவரை வாடிக்கையாளர்கள் பொறுமை காக்கவும்” என்று கூறப்பட்டுள்ளது.

மதிய நேரத்தில் உணவு நிறுவனங்களின் செயல்பாடு முடங்கியுள்ளது, வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் சேவை இயல்புக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.