இந்தியா

டாலர் மழையில் நனைந்த நாட்டுப்புற பாடகி - வைரல் வீடியோ

webteam

குஜராத்தில் நடந்த தூய்மை இந்தியா திட்டத்துக்கான விழிப்புணர்வு இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகி மீது பார்வையாளர்கள் பண மழை பொழிந்தனர்.

குஜராத் மொழியில் பிரபல கிராமியப் பாடகி கீதா ராபரி. கடந்த ஆண்டு அவர் பாடிய ஆல்பம் ஒன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இவர் அந்த ஆல்பத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அர்ப்பணித்திருந்தார். இதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடியை கீதா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். அப்போது, தான் பங்கேற்ற பள்ளி ஆண்டு விழாவில் ஒன்றில் சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்றதாகவும், அதில் தனது பாடலை ரசித்த மோடி 250 ரூபாய் வழங்கி கவுரவித்ததாகவும் கீதா ராபரி தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில், நவ்சாரி மாவட்டத்தில் குஜராத்தி பக்தி இசைப்பாடகர் கீதா ரப்ரியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ‘தூய்மை இந்தியா’ குறித்த விழிப்புணர்வு பாடலை அவர் பாடினார். அந்தப் பாடலைக் கேட்டு மெய்மறந்த ரசிகர்கள் அவர் மீது அமெரிக்க டாலர்கள், இந்திய ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை கட்டுக்கட்டாக வீசினர்.

நேரம் ஆக ஆக ரூபாய் நோட்டுகள் மலைபோல் குவிய தொடங்கின. நோட்டுகளை சேகரித்த கீதாவின் உதவியாளர்கள் இயந்திரம் வைத்து அங்கேயே எண்ணி சரிபார்த்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது.