வங்கி முறைகேடுகளை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தமிழகத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியின் 116ஆவது ஆண்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு CUB All in One என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய அவர், தங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என்று விவசாயிகள், பொதுமக்கள் உணரும் வகையில் வங்கிகள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முன்னதாக தென்னிந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு சங்கம் சார்பிலான நிகழ்ச்சி அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பி.எஸ் 6 வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் திட்டமிடுவதால் தான் பி.எஸ் 4 வாகனங்களின் விற்பனை மந்த நிலையில் இருப்பதாக கூறினார். மேலும் சென்னைக்கும், ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகருக்கும் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும், இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி பல மடங்கு உயரும் எனவும் தெரிவித்தார்.
வங்கி முறைகேடுகளைத் தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த சட்டத்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.