இந்தியா

வருத்தம் தெரிவித்தார்: சிவசேனா எம்.பி. இனி விமானத்தில் பறக்கலாம்

Rasus

விமான ஊழியரை தாக்கிய விவகாரத்தில், சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் வருத்தம் தெரிவித்ததையடுத்து அவருக்கு பறக்க விதித்த தடை நீக்கப்பட்டது.

சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர் அண்மையில் ஏர் இந்தியா பணியாளரை காலணியால் அடித்ததாக புகார் எழுந்தது. இதனால், விமானங்களில் பயணிப்பதற்கு ரவீந்திர கெய்க்வாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், ஏர் இந்தியா விமானங்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், சிவசேனா எம்.பி.க்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஏர் இந்தியா அதிகாரியை செருப்பால் அடித்தது தொடர்பாக மக்களவையில் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் ஆனால் சம்பந்தப்பட்ட விமான நிலைய அதிகாரியிடம் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் ரவீந்திர கெய்க்வாட் கூறினார்.

இதன் பிறகு, அவர் வெளியிட்ட அறிக்கையில் விமான ஊழியரை தாக்கிய சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். இதனை ஏற்று கொண்ட ஏர் இந்தியா நிர்வாகம் அவருக்கு பறக்க விதித்த தடையை நீக்கியது.