அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்த 4 காண்டாமிருகங்கள் மற்றும் ஒரு யானை உயிரிழந்துள்ளது.
அசாம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் கடும் மழைப்பொழிவு காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது. 31 மாவட்டங்களில் உள்ள 4,620 கிராங்களில் வசிக்கும் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அசாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த வெள்ளம் இந்தியாவின் முக்கிய தேசியப் பூங்காவில் ஒன்றான அசாம் காசிரங்கா தேசிய பூங்காவை விட்டு வைக்கவில்லை. வெள்ளம் புகுந்ததில், அங்கிருந்து ஏராளமான விலங்குகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்னர் பூங்காவின் 95% பகுதி நீரில் மூழ்கியது. தற்போது வெள்ள நீர் வடிந்து தர்மபுத்திரா நதியில் சென்று கலந்து வருகிறது. இதனால் பூங்காவில் நீர் குறைந்து வருகிறது. இதற்கிடையே வெள்ளத்திலிருந்து தப்பிக்க தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற மான்களில் ஒரு கொம்பு மான் மற்றும் 10 புள்ளி மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறந்துள்ளன.
அத்துடன் 4 காண்டாமிருகங்கள் மற்றும் ஒரு யானை வெள்ளத்தால் உயிரிழந்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் வெள்ளத்தில் சிக்கிய 52 வனவிலங்களை காப்பாற்றியுள்ளனர். இதில் 42 விலங்குகள் சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளன. இரண்டு காண்டாமிருகங்கள் உட்பட 10 விலங்களுக்கு சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது.