கேரளா கனமழை வெள்ளத்தில் சேதமடைந்த சாலை ஒன்று முழுவதுமாக சரிசெய்யப்பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2018 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கேரள மாநிலம் கனமழையை சந்தித்தது. இந்தக் கனமழையால் சாலை மற்றும் வீடுகளை வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தால் பல சாலைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. இதனால் கேரள மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. மறுபடியும் கேரள மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்ப பல நாட்களானது. அத்துடன் சேதமடைந்த சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களை சரி செய்ய நிறையே நாட்கள் ஆகும் எனப் பலர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இடுக்கி மாவட்டத்திலுள்ள வண்டூர், நடுவாத் மற்றும் வடக்கும்படம் ஆகிய பகுதிகளை இணைக்கும் சாலை வெள்ளத்தால் இரண்டாக பிளவுப் பட்டிருந்தது. இதனையடுத்து இந்தச் சாலையின் இரண்டு பக்கங்களிருப்பவர்களும் வெளியேற வழியின்றி தவித்தனர். இதனால் ராணுவம் தற்காலிக சாலையாக பனை மரத்தை கொண்டு பாலம் அமைத்திருந்தனர். ஆனாலும் இந்தப் பாலத்தினால் வாகனங்கள் செல்ல இயலாத நிலையிருந்தது. இது மக்களுக்கு பெரும் சிரமமாக இருந்துவந்தது.
அந்தச் சாலை தற்போது சரிசெய்யப் பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர், “கேரள அரசின் போர்கால நடவடிக்கையில் சரிசெய்யப்பட்ட சாலைகளில் இதுவும் ஒன்று. பொதுப்பணித்துறை இதுவரை 4429 கிலோ மீட்டர் அளவிற்கு சாலைகள் சரிசெய்யப்பட்டுள்ளன. அத்துடன் 429 சாலைப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. அதேபோல எல்லா காலநிலைகளை தாங்கும் சாலைகளும் கட்டப்பட்டு வருகின்றன” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுடன் அந்தச் சாலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையையும் அதன்பின்னர் அதன் தற்போதயை நிலையையும் ஒரு வீடியோவகவும் இணைத்துள்ளார்.