இந்தியா

நீரில் மிதக்கும் சோலார் தகடுகளை பொருத்தி சாதனை

நீரில் மிதக்கும் சோலார் தகடுகளை பொருத்தி சாதனை

webteam

நாட்டிலேயே முதன்முறையாக நீரில் மிதக்கக்கூடிய சோலார் தகடுகளை அமைத்து 2 மெகாவாட் மின்சார உற்பத்தியை விசாகப்பட்டினம் மாநகராட்சி தொடங்கியுள்ளது. 

ஆந்திர மாநிலம் கிரேட்டர் விசாகப்பட்டினம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி கார்பரேஷன் திட்டத்தின் கீழ் முடசர்லோவாவா ஏரியில் 20 ஏக்கர் பரப்பளவில் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இதுவரை 10 முதல் 500 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட நிலையில் முதன்முறையாக 2000 கிலோ வாட்(2 மெகாவாட்) மின்சாரம் உற்பத்தி செய்யும் விதமாக விசாகப்பட்டினம் மாநகராட்சி இந்த சோலார் பிளான்டுகளை 7 மாதத்தில் அமைத்துள்ளது. 

ஏரியில் தண்ணீர் வருகை அதிகமாக இருந்தாலும் சோலார் தகடுகள் மூழ்காத வகையில் ஏரியில் உள்ள தண்ணீரின் அலைகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தத் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக விசாகப்பட்டினம் மாநகராட்சிக்கு தினந்தோறும் 50,000 ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த சோலார்  தகடுகள் மூலமாக 25 ஆண்டுகளுக்கு மின்சார உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதனால் ஆண்டுக்கு 1,540 டன் நிலக்கரி எரித்து மின்சாரம் தயாரிப்பது தடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாகவும், ஏரியில் உள்ள தண்ணீர் ஆவியாவதை தவிர்க்கும் விதமாகவும், தண்ணீரில் உள்ள உயிரினங்கள் பாதிக்காத வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சார சேமிப்பு மற்றும் மின்சார உற்பத்தி செய்யும் விதமாக இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்த விசாகப்பட்டினம் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.