செய்தியாளர் - ராஜ்குமார்.ர
ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பிரபலமான நிறுவனமாக இருந்து வருகிறது ஃப்ளிப்கார்ட். அழகுசாதனப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களையும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலையில், பொருட்கள் விற்பனை மட்டுமின்றி, உணவு டெலிவரி துறையிலும் களமிறங்க ஃப்ளிப்கார்ட் தயாராகி வருகிறது. இதற்காக ‘Eat-in by Minutes’ என்ற புதிய சேவையை நிறுவனம் உருவாக்கி வருவதாகவும், பெங்களூருவில் இதற்கான சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஏற்கெனவே உணவு டெலிவரி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்விக்கி, ஸொமாட்டோ நிறுவனங்களுக்குப் போட்டியாக ஃப்ளிப்கார்ட் களமிறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
டெக் க்ரஞ்ச் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதற்கட்டமாகச் சில நூறு ஊழியர்களிடம் சோதனை செய்யப்பட்ட இந்தச் சேவை, தற்போது 8,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் சோதனை செய்யும் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு ஆர்டர்களை டெலிவரி செய்வதற்காகத் தனது எகார்ட் நிறுவனத்தின் மூலம் தனி டெலிவரி ஊழியர்களையும் ஃப்ளிப்கார்ட் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சேவைக்காக, ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) தளத்தில் இடம்பெற்றுள்ள உணவகங்களுடனும், நேரடியாக ஒப்பந்தம் செய்துள்ள உணவகங்களுடனும் ஃப்ளிப்கார்ட் இணைந்து செயல்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உணவகங்களுக்கு குறைந்த கமிஷன் கட்டணத்தை வழங்கும் முறையையும் நிறுவனம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விரைவாக டெலிவரி செய்யும் ‘Flipkart Minutes’ சேவையை வழங்கி வரும் நிறுவனம், தற்போது உணவு டெலிவரி துறையிலும் கவனம் செலுத்துவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தப் புதிய சேவை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டால், உணவு டெலிவரி சந்தையில் போட்டி மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், ‘Eat-in by Minutes’ சேவை பொதுமக்களுக்கு எப்போது அறிமுகப்படுத்தப்படும், எந்தெந்த நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தப் புதிய முயற்சியின் மூலம் ஸ்விக்கி, ஸொமாட்டோ நிறுவனங்களுக்குப் ஃப்ளிப்கார்ட் எந்த அளவுக்குப் போட்டியளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.