இந்தியா

கொரோனாவும் ஐந்து மாநில தேர்தலும்: அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு

EllusamyKarthik

மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் என ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலினால் இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் பரவல் அதிகரித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் மேற்கு வங்கம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளன. இதன் முடிவுகள் வரும் மே 2-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் மார்ச் 1 தொடங்கி ஏப்ரல் 11 வரையிலான 40 நாள் கால கட்டத்தில் இந்த மாநிலங்களில் நாள் ஒன்றுக்கு இருந்த சராசரி நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. 

தேசிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் ஐந்து மாநிலங்களிலும் பறந்து பறந்து பரப்புரை மேற்கொண்டது, தனிமனித இடைவெளி கடைபிடிக்க தவறியது, முகக்கவசம் அணிய மறந்து போனது என இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலை தீவிரம் அடைய இதுவும் ஒரு காரணம் என சொல்லப்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் மார்ச் 1 அன்று நாள் ஒன்றுக்கு 198 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டது. ஆனால் ஏப்ரல் 11 அன்று மட்டுமே சுமார் 4398 பேர் அம்மாநிலத்தில் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல தமிழகத்தில் மார்ச் 1 அன்று 474 என இருந்த தினசரி பாதிப்பு விகிதம் ஏப்ரல் 11 அன்று 6618 என அதிகரித்துள்ளது. இது வழக்கத்தை விடவும் 14 முறை அதிகரித்துள்ளதை காட்டுகிறது. 

புதுச்சேரியில் 9 டூ 306. கேரளாவில் 1938 டூ 6986. அசாமில் 33 டூ 352 என தினசரி நோய் தொற்று பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. 

நாள் ஒன்றுக்கு சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை 37,15,293க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மாநிலத்தில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. கடந்த மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 12 வரையிலான நாட்களில் மட்டும் சுமார் 58,393 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. 

நோய் தொற்று பாதிப்பை கருத்தில்கொண்டு அரசு தேர்தல் முடிந்த கையோடு பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகளை தமிழகத்தில் அமல்படுத்தி உள்ளது. முகக்கவசம் அணியாதவர்கள் இடத்தில் அபராதம் வசூலிப்பது, பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய தடை, திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, கடற்கரை - பூங்கா மாதிரியான இடங்களில் அதிகளவிலான மக்கள் குவிய கட்டுப்பாடு என கட்டுப்பாட்டு விதிமுறைகள் நீள்கின்றன. கோயில்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்பது இதில் லேட்டஸ்ட். அவரவர் சுயநலத்திலும் பொது நலன் இருக்க வேண்டும் அல்லவா?

தகவல் உறுதுணை : THE QUINT