கொரோனா பாதிப்பால் ஜூலை மாதம் மட்டும் இந்தியாவில் சுமார் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன. இந்த நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க நிறைய தனியார் நிறுவனங்கள் சம்பள குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜூலை மாதம் மட்டும் இந்தியாவில் சுமார் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக, இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) தெரிவித்துள்ளது. இந்த 50 லட்சம் பேரும் நிலையான சம்பளம் பெரும் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ‘லாக்டவுன்’ அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை மொத்தம் 1.89 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.
CMIE தரவுகள் படி, ஏப்ரல் மாதத்தில் நிலையான சம்பளத்தில் இருக்கும் 1.77 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மே மாதத்தில் 1 லட்சம் பேரும், ஜூலை மாதத்தில் 50 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
ஆனால் ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது. ஜூனில் கணிசமான வேலைவாய்ப்புகள் உருவாகினாலும், ஜூலை மாதத்தில் ஜூன் மாதத்தை விடவும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை மக்கள் இழந்துள்ளனர்.
சம்பள வேலைவாய்ப்புப் பிரிவில் வேலையை இழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என CMIE எச்சரித்துள்ளது.