பிரதமர் மோடியின் குரலுக்கு வாயசைத்து ‘டிக்டாக்’ வீடியோ வெளியிட்ட 5 காவலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இளைஞர்களை அதிகம் கவர்ந்த சமூக வலைத்தளங்களில் ஒன்றாக ‘டிக்டாக்’ செயலி இருந்து வருகிறது. இந்தச் செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி, நடனம் ஆடி தங்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். பொழுதுபோக்கு எனக்கூறிகொண்டு பணியில் இருக்கும் காவலர்கள், மருத்துவர்கள் எனப் பலரும் ‘டிக்டாக்’ வீடியோக்களை செய்து தங்கள் கடமைகளை மறப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
சமீபத்தில் குஜராத்தில் காவல் நிலைய லாக் அப் அருகே நின்று பெண் காவலர் எடுத்த ‘டிக்டாக்’ வீடியோ வைரலானதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ‘டிக்டாக்’ வீடியோவுக்காக அபயகரமான செயல்களைச் செய்து உயிரிழக்கும் கொடுமையும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் குரலுக்கு வாயசைத்து ‘டிக்டாக்’ வீடியோ வெளியிட்ட 5 காவலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அகமதாபாத் போலீசாரின் அந்த ‘டிக்டாக்’ வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து உயர் அதிகாரிகள் விசாரணை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இது குறித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ள டிஜிபி ஷிவானந்த், ‘டிக்டாக்’ மாதிரியான செயலிகள் மூலம் வீடியோ வெளியிடும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் பணியில் இல்லாத நேரத்தில் ‘டிக்டாட்’ வெளியிட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையின் மாண்பை குலைக்கும் வகையில் போலீசார் ஈடுபடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.