பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் குண்டுவெடித்ததில் இருவர் உயிரிழந்துனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மாவட்ட நீதிமன்றத்தின் கழிவறையில் சரியாக நண்பகல் 12.22 மணிக்கு இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குண்டுவெடிப்பில் குளியலறையின் சுவர்கள் இடிந்து விழுந்ததுடன், ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. அப்பகுதியை சுற்றி வளைத்துள்ள போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆறுமாடிக்கட்டிடடத்திலிருந்து புகை வெளியேறுவதைக் கண்டதும் நீதிமன்றத்திற்கு வெளியே பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். இதனால் காவல்துறையினர் பொதுமக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றி வருகின்றனர். மேலும், இந்த குண்டு வெடிப்புக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெரியவில்லை.
இதற்கிடையில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சம்பவ இடத்துக்குச் செல்ல இருக்கிறார். "குற்றவாளிகளை நாங்கள் விடமாட்டோம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் லூதியானா போலீஸ் கமிஷனர் குர்பிரீத் புல்லர் தெரிவித்தார்.