சட்டவிரோத பண மோசடி வழக்கில் கொல்கத்தாவை சேர்ந்த சுப்ரதிப் குஹா என்வர் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர் வைத்திருந்த 3 சிம்பன்சிகள், மற்றும் நான்கு மார்மோசெட் குரங்குகளையும் கைப்பற்றினர்.
மேற்குவங்க வனத்துறை சார்பில் மேற்குவங்க காவல்துறைக்கு ஒரு புகார் வந்துள்ளது. அதில் கொல்கத்தாவை சேர்ந்த சுப்ரதிப் குஹா என்பவர் சட்டவிரோதமாக சிம்பன்சி குரங்குகளை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்திருக்கின்றனர். அப்போது அந்த நபர் பண மோசடியில் ஈடுபட்டிருப்பதும் கொல்கத்தா காவல்துறைக்கு தெரியவர, பணமோசடி தொடர்பான வழக்கை அமலாக்கத்துறைக்கு விசாரித்திருக்கிறது.
அப்போது சுப்ரதிப் குஹா பல மோசடி வழிகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக குரங்குகளை வைத்திருப்பதும் தெரியவந்தது. குரங்குகளை வைத்திருப்பதற்கான முறையான ஆவணங்களும் இல்லாமல் போலி ஆவணங்களையும் வைத்திருந்துள்ளார் சுப்ரதிப் குஹா.
இதனையடுத்து சுப்ரதிப் குஹா மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர் வைத்திருந்த குரங்குகளை கைப்பற்றினர். அந்த சிம்பன்சி குரங்கு ஒன்றின் விலை தலா 25 லட்சம் ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மார்மோசெட் குரங்கு ஒன்றின் விலை ரூ.1.5 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 3 சிம்பன்சி மற்றும் 4 மார்மோசெட் குரங்குகள் தற்போது அலிப்போர் உயிரியியல் பூங்காவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.