இந்தியா

அன்று கட்டட வேலை, இன்று `முனைவர் பட்டம்!’ கேரள பழங்குடியின இளைஞருக்கு குவியும் வாழ்த்துகள்

kaleelrahman

கேரளாவின் பாலக்காட்டில் மருத்துவ வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை கேரள மாநிலம் அட்டப்பாடியைச் சேர்ந்த டாக்டர் ஆர்.சந்திரன் பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் அட்டப்பாடியில் உள்ள கொட்டியார்கண்டி (Goddiyarkandi) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரங்கன் - லட்சுமி தம்பதியர். இவர்களது மகன் சந்திரன், லக்னோவில் ரேபரேலியில் உள்ள தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

அட்டப்பாடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன், அகலியில் உள்ள சமூக நல மைய நடமாடும் பிரிவில் மருந்தாளுனராகப் பணியாற்றி வருகிறார். சந்திரன், சோலையூரில் உள்ள அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே தொழில்முறைப் படிப்பைத் தேர்வுசெய்ய முடிவு செய்தார். பின்னர் அவர் இரண்டு தனியார் மருந்தகக் கல்லூரிகளில் படிக்க முயற்சித்த போதிலும், அவரால் படிப்பை தொடர முடியவில்லை, இதையடுத்து தனது கிராமத்திற்குத் திரும்பிய அவர், வாழ்வாதாரத்திற்காக கட்டிட வேலைக்குச் சென்று வந்தார். இந்நிலையில், பி ஃபார்ம் படிக்க சேர்க்கை கிடைத்ததும் அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது.

சேர்க்கை கிடைத்ததையடுத்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் பி.எஸ்சி வேதியியல் பி பார்ம் படிப்பை அவர் தேர்ந்தெடுத்தார். அது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. முதுகலைப் படிப்பில் சேரும் முன், பல மருத்துவமனைகளில் மருந்தாளுநராகப் பணியாற்றினார் அவர். முதுநிலைப் பட்டப்படிப்புக்குப் பிறகு சந்திரனுக்கு மருந்தாளுநராக அரசு வேலை கிடைத்த நிலையில், விடுப்பு எடுத்துக் கொண்டு ரேபரேலியில் உயர்கல்விக்கு படிக்க முடிவு செய்த சந்திரன், அப்பகுதியை சேர்ந்தோரில் மருத்துவ வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் தன் பணிக்கு திரும்பியுள்ளார் அவர். அதன்படி தற்போது 36 குக்கிராமங்களில் ரத்த சோகை நோயால் பதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, அகலி சமுதாய சுகாதார நிலையத்தின் நடமாடும் பிரிவு மூலம் மருந்துகளை விநியோகம் செய்கிறார். இங்குள்ள பழங்குடியின மக்களிடையே அடிக்கடி ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோயாக இருக்கும் Sickle Cell anaemia நோயை ஒழிப்பதே தனது மிகப்பெரிய நோக்கம் என்கிறார் சந்திரன்.

இவர் பற்றிய செய்தியை அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி, தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் சந்திரனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் அவர், “பாலக்காடு மாவட்டம் - அட்டப்பாடியில் உள்ள கொட்டியார்கண்டி கிராமத்தைச் சேர்ந்த இருளா பழங்குடியினரில் இருந்து மருத்துவ வேதியியலில் முனைவர் பட்டம் பெறும் முதல் உறுப்பினராக டாக்டர் சந்திரன் திகழ்கிறார் என்பதை அறிவது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற முதல் இருளர் இவர்தான். சந்திரன் உண்மையில் ஒட்டுமொத்த இருளர்களையும் பெருமைப்படுத்தியுள்ளார். பழங்குடியின சமூகங்களில் Sickle Cell anaemia-வை ஒழிக்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தையும், தனது சமூகத்திற்கு திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற அவரது கனவையும் நனவாக்க அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். டாக்டர் சந்திரனுக்கு மேலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.