ஜம்மு காஷ்மீருக்கு முதல் முறையாக சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் இருந்து புறப்பட்ட முதல் சரக்கு ரயில், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தை அடைந்தது. இது காஷ்மீரின் வர்த்தக வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளது என்றும், காஷ்மீர் தொழில் துறை வளர்ச்சியடையும் என்றும் வர்த்தகச் சபையின் தலைவர் ஜாவித் அகமது தெங்கா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பகுதியில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்குப் பொருட்களை எடுத்துச் செல்ல, ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை மட்டுமே இதுவரை வர்த்தகர்கள் நம்பியிருந்தனர். இந்த நெடுஞ்சாலை, மழை மற்றும் பனிக்காலங்களில் அடிக்கடி மூடப்படுவதால், வர்த்தகர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், அப்பிராந்தியத்துக்கு முதல் சரக்கு ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்தச் சரக்கு ரயில் சேவை, தோட்டக்கலை விளைபொருட்களை 24 மணி நேரத்துக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்ல உதவும். மேலும், போக்குவரத்து செலவும் குறையும்.
இது ஆப்பிள் போன்ற அழுகும் பொருட்களை விரைவாகச் சந்தைக்குக் கொண்டு செல்ல உதவுவதால், விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர். சரக்கு ரயில் சேவை ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் பெரிதும் உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.