ஜார்கண்ட் AI
இந்தியா

‌பூமிக்கு அடியில் இருந்து சீறிப்பாய்ந்த தீ.. ஜார்கண்டில் அதிர்ச்சி!! காரணம் என்ன?

ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் கொட்டும் மழையிலும், பூமிக்கு அடியில் இருந்து தீப்பிளம்புகளும் வாயுமிதவைகளும் வெளியேறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Premkumar S

ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டம், கோமியா ஒன்றியத்தில் பந்த் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் திறந்த வெளிப்பகுதியில் நேற்று, தரைக்கு அடியில் இருந்து கொதிக்கும் நீர்க்குமிழிகளுடன் திடீரென தீப்பிழம்புகள் வெளியேறத் தொடங்கின. மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும், நிலத்தில் தேங்கியிருந்த நீரில் குமிழ்கள் தோன்றி, தொடர்ந்து தீப்பிடித்து எரிந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தியிருந்தது.

பூமிக்கடியில் வெளியேறிய தீ

இதற்கு காரணமாக, இப்பகுதியில் நிலத்தடி மீத்தேன் வாயு அதிக அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கோமியா பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயு தொடர்பான திட்டமும் செயல்பட்டு வருவதாகவும், போகாரோ ஆற்றங்கரையை ஒட்டிய பகுதியில் நிலத்தடியில் உள்ள மீத்தேன் வாயு வளங்கள் தொடர்பான பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச்சூழலில் தான், மழையினால் மண் தளர்வடைந்ததால், அடியில் இருந்த வாயு வெளியேறி ஆக்ஸிஜனுடன் தொடர்புகொண்டு தீப்பற்றியிருக்கலாம் என அறிவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும், தீப்பற்றியதற்கான உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஓஎன்ஜிசி குழுவினரும், தீயணைப்புத் துறையினரும் நிலமையை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகே இதற்கான காரணம் தெளிவாகும். பாதுகாப்பு கருதி பொதுமக்கள் யாரும் தீப்பிளம்புகள் எரியும் இடத்திற்கு அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழையிலும், பூமிக்கடியில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.