தீபாவளி மற்றும் தசரா உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் பெரிய அளவு மாசு ஏதும் ஏற்படவில்லை என உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
2016-ஆம் ஆண்டு டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததை அடுத்து பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. அந்த நிபுணர் குழு காற்று மாசு குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதில் மற்ற நாட்களை விட தீபாவளி, தசரா ஆகிய நாட்களில் மாசு அளவு உயர்வதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இந்த மாசு அளவு சுவாச மற்றும் இதய கோளாறுகளை ஏற்படுத்தும் வகையில் தீவிரமாக இல்லை என தெரிவித்துள்ளது. பட்டாசுகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் இந்த அறிக்கை பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.