கேரள தலைமைச் செயலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஏ.சியில் ஏற்பட்ட மின் கசிவால் விபத்து ஏற்பட்டது என தலைமைச் செயலர் விளக்கம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமைச் செயலகத்தில் அரசு நெறிமுறைகளை வழிகாட்டும் “ப்ரோட்டாக்கால்” அலுவலகத்தில் மாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அலுவலகத்தில் உள்ள சிறிய தீயணைப்பு கருவிகளைக் கொண்டு சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது. இருந்தாலும் அலுவலகத்தில் இருந்த சில கோப்புகள் எரிந்து போனதாக கூறப்படுகிறது. அலுவலக “ஏசி”யில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக அரசின் தலைமைச் செயலர் விஸ்வா மேத்தா விளக்கம் அளித்தார். ஆனாலும், கேரள தங்க கடத்தல் வழக்கு குறித்த ஆவணங்களை அழிக்க நடந்த முயற்சி என்ற குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சட்டசபை எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னித்தலா நிகழ்விடம் வந்தார். அவரும் தங்க கடத்தல் ஆவணங்களை அழிப்பதற்காக தீ வைக்கப்பட்டுள்ளது. இது விபத்து இல்லை. சட்டசபை உறுப்பிர்களைக் கூட அனுமதிக்காதது, பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது தடையங்களை அழிப்பதற்காகத்தான் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டார்.
தொடர்ந்து கேரள முதல்வரின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரவு 10 மணிக்கும் மேலும் எதிர்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்தவண்ணமே இருந்தது. போராட்டக்காரர்களை “ஜல பீரங்கி” மூலம் நீர் பாய்ச்சி அடித்து கலைக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் கலையாமல் போராட்டத்தையும், அரசுக்கு எதிரான முழக்கங்களையும் தொடர்ந்தவண்ணமே இருந்தனர். கேரள அரசு தரப்பில் பேசிய அமைச்சர் இ.பி.ஜெயராஜன், எதிர்கட்சிகள் தீ விபத்தை திசை திருப்புகின்றன என தெரிவித்தார்.