இந்தியா

பெங்களூரு விமானக் கண்காட்சி அருகே தீ விபத்து - 100 கார்கள் தீயில் எரிந்து நாசம்

பெங்களூரு விமானக் கண்காட்சி அருகே தீ விபத்து - 100 கார்கள் தீயில் எரிந்து நாசம்

webteam

பெங்களூருவில் சர்வதேச விமானக் கண்காட்சி நடக்கும் இடம் அருகே தீ விபத்து ஏற்பட்டதில் 100 கார்கள் தீயில் எரிந்தன. 

ஏரோ இந்தியா விமானக் கண்காட்சி பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1996ம் ஆண்டு முதல் இந்தக் கண்காட்சி இங்கு நடைபெற்று வருகிறது. 2017ம் ஆண்டிற்கு பிறகு இந்தக் கண்காட்சி கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசிய பிராந்தியத்தின் மிகப் பெரிய விமானக் கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது. 

இதைத்தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி இந்தக் கண்காட்சிக்கான ஒத்திகை பார்க்கப்பட்டது. அப்போது இரண்டு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், தற்போது விமானக் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், கண்காட்சியைப் பார்க்க வருபவர்களுக்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர்கள் வாகன நிறுத்தத்தில் வாகங்களை நிறுத்தி விட்டு கண்காட்சியைப் பார்க்க சென்றுள்ளனர்.

அப்போது கண்காட்சியைப் பார்க்க வந்தவர்களின் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.  இதில் 100க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். 

இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், கேட் 5 ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100 க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்துள்ளதாகவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் தரைப்பகுதியில் உள்ள புல்களின் மூலம் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என நம்பப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.