amit shah, Mahua Moitra x page
இந்தியா

அமித் ஷா குறித்து சர்ச்சைப் பேச்சு.. வழக்குப்பதிவை விமர்சித்த மஹுவா மொய்த்ரா.. நடந்தது என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசிய கருத்துக்காக தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Prakash J

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசிய கருத்துக்காக தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹுவா மொய்த்ரா, சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். தவிர, பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்ற அவையில் கடுமையாகக் குரல் கொடுக்கக் கூடியவர். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக அவர் பேசிய கருத்துக்காக தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வங்கதேசத்தின் எல்லை மாநிலமாக மேற்கு வங்கம் இருக்கும் நிலையில், அங்கிருந்து மக்கள் ஊடுருவதாக பாஜக அரசு, மாநில அரசைக் குற்றஞ்சாட்டி வருகிறது. 'ஊடுருவல்' காரணமாக மேற்கு வங்கத்தின் மக்கள்தொகை மாறி வருவதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் திருப்திப்படுத்தும் அரசியலுக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிப்பதாகவும், ஊடுருவல்காரர்கள் அவரது முக்கிய வாக்கு வங்கியாக இருப்பதாகவும் தொடர்ந்து பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது.

அமித் ஷா, மோடி

மஹுவா மொய்த்ரா பேசியது என்ன?

இந்த நிலையில், இதுதொடர்பாக மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா மொய்த்ரா, ”எல்லைப் பாதுகாப்பு என்பது உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு. அமித் ஷா அதைத் தவிர்த்துவிட்டு, ஊடுருவலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தைக் குறை கூற முடியாது. இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க யாரும் இல்லையென்றால், வேறொரு நாட்டைச் சேர்ந்த மக்கள் தினமும் லட்சக்கணக்கில் நுழைந்து, நம் தாய்மார்களையும் சகோதரிகளையும் பார்த்து, நம் நிலத்தை அபகரித்தால்.. முதலில், அமித் ஷாவின் தலையை வெட்டி மேசையில் வைக்க வேண்டும்” எனப் பேசியதாகக் கூறப்படுகிறது. அவர், வங்காள மொழியில் இந்தக் கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சத்தீஸ்கர் மாவட்டம் ராய்ப்பூரின் மனா கேம்ப் காவல் நிலையத்தில் மொய்த்ரா மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மொய்த்ராவின் கருத்துகள் ஜனநாயக நிறுவனங்களை அவமதிப்பதாகவும், வெறுப்பைப் பரப்புவதாகவும், தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கோபால் சமந்தோ அளித்த புகாரின் அடிப்படையில், அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காட்டமாய் விமர்சித்த மஹுவா மொய்த்ரா

இந்த நிலையில், தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரைக் கடுமையாகச் சாடியுள்ளார். தனது கருத்தை ஒரு பழமொழி என்று குறிப்பிட்ட மொய்த்ரா, "முட்டாள்களுக்குப் பழமொழிகள் புரியாது" என்றார். மேலும், காவல்துறை தனது வார்த்தைகளைத் திரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Mahua Moitra

”முட்டாள்களுக்குப் பழமொழிகள் புரியாது”

இதுகுறித்து அவர், “2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, ​​'அப்கி பார், 400 பார்' என்ற முழக்கம் ஒலித்தது. ’வெறும் 240 இடங்கள் என்ற வெற்றி நரேந்திர மோடிக்கு ஓர் அடி’ என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அப்படியானால் யாராவது பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தில் அறைந்தார்களா? இல்லை... அப்போது எல்லோரும் 'தலைகள் உருளும்' என்றார்கள். தலைகள் உருளுமா? ஆமாம், அப்படித்தான். இதைத்தான் ஆங்கிலத்தில் ’இடியம்ஸ்’ என்று சொல்வார்கள். தலைகள் உருளும் என்று நீங்கள் சொல்கிறபோது, அது ராஜாக்கள் கீழ்ப்படியாதவர்களின் தலைகளை வெட்டியதைக் குறிக்கிறது. நீங்கள் தலையை வெட்டும்போது, ​​அது உருள ஆரம்பிக்கும். உண்மையில் ஒருவரின் தலையை வெட்டுவதில்லை. 'தலைகள் உருளும்' என்பது பொறுப்புக்கூறலுக்கான ஒரு பழமொழி. அதேபோல், பெங்காலி மொழியில், 'லோஜ்ஜய் மாதா கட்டா ஜாவா' என்பது உங்கள் தலையை நீங்களே வெட்டிக் கொள்ளும் அளவுக்கு வெட்கப்படுகிறீர்கள் என்று பொருள். 'மாதா கட்டா ஜாவா' என்று நாம் கூறும்போது, ​​அது பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்வது என்று பொருள். இது ஒரு பழமொழி. இப்போது, ​​நிச்சயமாக, முட்டாள்களுக்குப் பழமொழிகள் புரியவில்லை" என்றார்.

”நீங்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லையா?”

தொடர்ந்து பேசிய அவர், “பாஜக தன்னை ஓர் அரசியல் பலிகடாவாக மாற்ற முயல்கிறது. இதுபோன்ற விஷயம் நடக்கும் ஒவ்வொரு முறையின்போதும் பாஜக, என்னை ஒரு கதாநாயகியாக மாற்றும் முட்டாள்தனத்தை செய்கிறது. முன்னரே, நீங்கள் என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றினீர்கள். நான் வென்று திரும்பி வந்தேன். நீங்கள் ஒவ்வொரு தடவையும் எனக்கு இப்படிச் செய்யும்போது, ​​அரசியல்ரீதியாக அது உங்களை எங்கும் கொண்டு போகாது. அதேநேரத்தில், என்னை ’ஜோன் ஆஃப் ஆர்க்’ மாதிரி ஆக்கிவிடுகிறது. ஆகையால், இதிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லையா?

நீங்கள் ஒவ்வொரு தடவையும் எனக்கு இப்படிச் செய்யும்போது, ​​அரசியல்ரீதியாக அது உங்களை எங்கும் கொண்டு போகாது.
மஹுவா மொய்த்ரா, திரிணாமுல் காங். எம்பி

”மீண்டும் நீதிமன்றம் செல்வேன்” - மஹுவா

பாஜக தன்னுடன் மோதலில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும், ​​தான் வெற்றிபெற்று வலுவாக மீண்டும் வருகிறேன். ஆகையால், உங்கள் எஃப்.ஐ.ஆர்-களை எடுத்து சூரியன் பிரகாசிக்காத இடத்தில் வைக்கவும். விரைவில் உங்களுக்கு நல்ல புத்தி வரும் என்று நம்புகிறேன்” எனக் காட்டமாக விமர்சித்த அவர், சத்தீஸ்கர் காவல் துறையையும் மொய்த்ரா கடுமையாகச் சாடினார். “பொய்யான FIRகளை பதிவுசெய்ய வங்காள மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும் வார்த்தைகளை மொழிபெயர்க்க கூகுள் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தும்போது இதுதான் நடக்கும்” எனத் தெரிவித்த அவர், இந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறேன். அது, அவர்களுக்கு இன்னோர் அடியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.