ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தை பாரதிய ஜனதா அரசியல் ரீதியாக பயன்படுத்துவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய அக்கட்சி முயல்வதாகவும் மம்தா சாடியுள்ளார். பாரதிய ஜனதா தொண்டர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக பொய்யான தகவல்களை பரப்பி மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் மம்தா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் எல்லா மத மக்களின் உணர்வுகளுக்கும் தங்கள் கட்சி மதிப்பளிப்பதாகவும் மம்தா குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மம்தா பானர்ஜி நைஹடி பகுதியில் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரது பாதுகாப்பு வாகனங்களுக்கு முன்பாக சிலர் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். காரில் இருந்து கொண்டே இதனை கவனித்த மம்தா பொறுமையிழந்தார். காரில் இருந்து இறங்கிய அவர், முழக்கமிட்டவர்களை நோக்கிச் சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சித் தலைவர்கள் வீடுகளுக்கு அருகில் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் பாரதிய ஜனதா தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனிடையே ஜெய் ஸ்ரீராம் என எழுதப்பட்ட 10 லட்சம் கடிதங்களை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அனுப்ப உள்ளதாகவும் அம்மாநில பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது.