இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது செயற்கை நுண்ணறிவு (AI). இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அந்த வளர்ச்சியை மேலும்மேலும் உயர்த்தும் நோக்கில் போட்டிபோட்டுச் செயல்பட்டு வருகின்றன தொழில்நுட்ப நிறுவனங்கள். இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சிய நிலையில், தற்போது சீனாவும் போட்டியில் களத்தில் குதித்துள்ளது. தவிர, அது சமீபத்தில் அறிமுகப்படுத்திய புது மாடலால் அமெரிக்க மற்றும் உலக வர்த்தகப் பங்குச் சந்தைகளே ஆட்டம் கண்டன. ஆம், சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீக், செயற்கை நுண்ணறிவு துறையில் (ஏஐ) மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது.
இந்த நிலையில், சீன நிறுவனம் அறிமுகப்படுத்திய டீப்சீக் (Deepseek) ஏஐ மாடலை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களில் பதிவிறக்கும் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என தலைமை நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ”டீப்சீக் தற்போது மதிப்பாய்வின் கீழ் உள்ளது. அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கவில்லை. சாட்பாட்டை பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் மென்பொருளை வழங்கவும், சாதனங்களை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அச்சுறுத்தும் நபர்களை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். இதற்கிடையே இத்தாலி நாடு முழுவதும் டீப்சிக் ஏ.ஐ. மாடலுக்கு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆஸ்திரேலியாவிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என இந்திய அரசும் நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு ரகசியங்கள் கசியாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சகம், ”சாட் ஜிபிடி மற்றும் டீப் சீக் போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ரகசியங்கள் கசிய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. சீன உருவாக்கமான 'டீப் சீக்’ தகவல்களை சேகரித்து சீனாவுக்கு கொண்டுபோய்ச் சேர்க்கும் எனக் கருதப்படுகிறது. ஆகவே செயற்கை நுண்ணறிவு செயலிகளை பயன்படுத்த வேண்டாம்” என தரவுகளை பாதுகாக்க நிதி அமைச்சகம் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
நிதிச் செயலாளரால் அங்கீகரிக்கப்பட்ட இந்த சுற்றறிக்கை, வருவாய், பொருளாதார விவகாரங்கள், செலவினம், பொது நிறுவனங்கள் மற்றும் நிதி சேவைகள் போன்ற அரசுத் துறைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பிற அமைச்சகங்களுக்கும் இதே போன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. எனினும், ChatGPT தயாரிப்பாளரான OpenAI-யின் தலைவர் சாம் ஆல்ட்மேன் இன்று, இந்தியாவுக்கு வரவுள்ளநிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது. உள்நாட்டு செய்தி நிறுவனமான ANI பதிப்புரிமை உள்ளடக்கத்தைப் பயன்படுத்தியதாகக் கூறி கடுமையான சட்டப் போராட்டத்தைத் தூண்டிய நிலையில், ஆல்ட்மேனின் இந்திய பயணம் அமைந்துள்ளது.