மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் web
இந்தியா

பட்ஜெட் 2026 | ஆந்திரா முதல் காஞ்சிபுரம் வரை.. கவனம் பெறும் நிர்மலா சீதாராமன் புடவைகள்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 9ஆவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

Prakash J

ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட்டின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்திருக்கும் ஆடை கவனம் பெறும். இந்த முறை காஞ்சிபுரம் பட்டுச் சேலை அணிந்து வந்திருந்தார். இதுகுறித்த ஒரு தொகுப்பை இங்கே பார்ப்போம்.

2019ஆம் ஆண்டு: இளஞ்சிவப்பு நிற மங்களகிரி பட்டுப் புடவை

2019ஆம் ஆண்டு, தங்க நிற பார்டருடன் கூடிய ஓர் இளஞ்சிவப்பு நிற மங்களகிரி பட்டுப் புடவையை அணிந்திருந்தார். இது, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவை ஏந்தி நின்றது.

2020ஆம் ஆண்டு: அடர் மஞ்சள் பட்டுப் புடவை

2020-இல் அவர் நீல நிறக் கரையுடன் கூடிய அடர் மஞ்சள் பட்டுப் புடவையைத் தேர்ந்தெடுத்தார். இந்தியப் பண்பாட்டில், மஞ்சள் நிறம் மங்களகரத்திற்கும் செழிப்புக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது.

2021ஆம் ஆண்டு: போச்சம்பள்ளி இக்கத் சேலை

கொரோனாவுக்குப் பிந்தைய இந்தக் காலகட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில், அவர் தெலங்கானாவின் புகழ்பெற்ற போச்சம்பள்ளி இக்கத் சேலையை அணிந்திருந்தார். சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான இந்த பட்டுச் சேலை, இந்தியாவின் 'பட்டு நகரத்தின்' கைவினைத் திறனைப் பிரதிபலித்தது.

2022ஆம் ஆண்டு: எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய பழுப்பு நிற புடவை

2022ஆம் ஆண்டு கூட்டத்தொடரில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு நேர்த்தியான பழுப்பு நிறப் பட்டுப் புடவையை அணிந்திருந்தார். தார்வாட் பகுதியின் இந்த புகழ்பெற்ற கைத்தறி கலைக்கு புவிசார் குறியீடு (GI tag) கிடைத்தது.

2023ஆம் ஆண்டு: சிவப்பு நிற சம்பல்புரி புடவை

2023 பட்ஜெட்டின்போது, ​​நிர்மலா சீதாராமன் சிவப்பு நிற சம்பல்புரி புடவை அணிந்து வந்தார். கோயில் வடிவ பார்டரைக் கொண்ட இந்தப் புடவையில், ஒடிசாவின் பாரம்பரிய கலாசாரம் மற்றும் கைவினைப் பொருட்களின் அடையாளங்களான சங்கு மற்றும் சக்கரம் போன்ற உருவங்கள் இடம்பெற்றிருந்தன.

2024ஆம் ஆண்டு: வெளிர் வெள்ளை நிறப் பட்டுப் புடவை

2024ஆம் ஆண்டில், நிர்மலா சீதாராமன் இரண்டு முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். ஒன்று மத்திய பட்ஜெட், மற்றொன்று இடைக்கால பட்ஜெட். இடைக்கால பட்ஜெட்டின் போது, ​​நிதி அமைச்சர் வெளிர் வெள்ளை நிறப் பட்டுப் புடவையை அணிந்திருந்தார்.

2024ஆம் ஆண்டு: நீல நிறக் கோடு கொண்ட ரன்னிங் ஸ்டிட்ச் புடவை

2024ஆம் ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டின் போது, ​​அவர் 'ரன்னிங் ஸ்டிட்ச்' என்று அழைக்கப்படும் நீல நிறக் கோடுகள் கொண்ட ஒரு புடவையைத் தேர்ந்தெடுத்திருந்தார். அது எளிமைக்கும் நுட்பமான கலைக்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தது.

2025ஆம்ஆண்டு: மதுபானி ஓவியம் பொறிக்கப்பட்ட, தங்க நிற பார்டர் புடவை

பீகாரின் புகழ்பெற்ற மதுபானி ஓவியம் பொறிக்கப்பட்ட, கிரீம் மற்றும் தங்க நிற பார்டர் கொண்ட புடவையை அணிந்திருந்தார். இந்த புடவை பத்ம விருது பெற்ற துலாரி தேவியால் பரிசளிக்கப்பட்டது. இது கைவினைத்திறன் மற்றும் பிராந்திய கலைகளின் மீது அவருக்குள்ள மரியாதையை பிரதிபலிக்கிறது.

2026ஆம் ஆண்டு: ஊதா நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவை 

நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்டின் கைத்தறி பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் ஊதா நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவையை அணிந்திருந்தார் நிர்மலா சீதாராமன். பொன்-பழுப்பு (Gold-brown) நிறத்தில் கட்டம் போட்ட டிசைன்களும், காபி-பழுப்பு நிறத்தில் விரிவான வேலைப்பாடுகள் கொண்ட பார்டரும் அமைந்திருந்தது.