இந்தியா

நிதியமைச்சரானார் நிர்மலா சீதாராமன் - அமித் ஷாவிற்கு உள்துறை ஒதுக்கீடு

நிதியமைச்சரானார் நிர்மலா சீதாராமன் - அமித் ஷாவிற்கு உள்துறை ஒதுக்கீடு

webteam

மத்திய நிதியமைச்சர் பொறுப்பு நிர்மலா சீதாராமனுக்கும், உள்துறை அமைச்சர் பதவி பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறை நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 58 மத்திய அமைச்சர்களும் பதவியேற்றனர். இதுவரை மத்திய அமைச்சர் பதவி வகித்திடாத பாஜக தலைவர் அமித் ஷா நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி நேற்று பதவியேற்காததால், அவரது பொறுப்பு அமித் ஷாவிற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம் தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் இதற்கு முன்னர் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தவர் என்பதால் அவரும் நிதியமைச்சராக வருவார் என சில கருத்துகள் இருந்தன.

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர்களின் இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் நிதியமைச்சர் பொறுப்பு நிர்மலா சீதாராமனிற்கு வழங்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் வகித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பு, ராஜ்நாத் சிங்கிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நிதியமைச்சர் பொறுப்பு அமித் ஷாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியுறவுத்துறை செயலராக இருந்த ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.