இந்தியா

ஆகஸ்டு-டிசம்பரில் 216 கோடி தடுப்பூசிகள் தயாராகி விடும்: நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால்

Sinekadhara

இந்தியாவில் ஆகஸ்டு முதல் டிசம்பர் வரையிலான ஐந்து மாத காலத்தில் 216 கோடி தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய 3 தடுப்பூசிகளின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், தடுப்பூசி ஒன்றுதான் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழியாக உள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், ஆகஸ்டு முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அதிகளவிலான தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், அப்போது நாட்டில் தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இயலும் என்றும் குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் தடுப்பூசி தயாரிப்பு 300 கோடியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.