இந்தியா

மறைந்த நடிகர் அம்பரீஷ் பெயரில் திரைப்பட நகரம்!

webteam

மறைந்த நடிகர் அம்பரீஷ் பெயரில் மைசூருவில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

கன்னட நடிகர் அம்பரீஷ், கடந்த 24 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு கன்னட திரையுலகம் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் பெங்களூருவில் நேற்று  நடந்தது. 

இதில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பேசும்போது, ’மைசூருவில் திரைப்பட நகரம் அமைக்க வேண்டும் என்பது அம்பரீசின் விருப்பம். அதற்காக நான் முதலமைச்சராக இருந்தபோது இடத்தை ஒதுக்கி கொடுத்தேன். அங்கு பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகளுக்கு இன்னும் வேகம் கொடுத்து, அம்பரீஷ் பெயரை அதற்கு சூட்ட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். 

இதைதொடர்ந்து முதலமைச்சர் குமாரசாமி பேசும்போது, “சித்தராமையா கேட்கும் போது இல்லை என்று சொல்ல முடியாது. அதனால் மைசூருவில் அம்பரீஷ் பெயரில் திரைப்பட நகரம் அமைக்கப்படும். ராமநகரில் நடிகர் ராஜ்குமார் பெயரில் திரைப்பட பல்கலைக்கழகம்  தொடங்கப்படும்” என்றார். பின்னர் தனக்கும் அவருக்கும் இருந்த நட்பு பற்றி பேசினார்.

முதலமைச்சர் குமாரசாமி, பதவி ஏற்ற பின் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ராமநகரில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சித்தராமையா மைசூருவிலேயே திரைப்பட நகரத்தை அமைக்க வேண்டும் என்று கூறிவந்தார். இந்நிலையில் சித்தராமையாவின் கோரிக்கையை இப்போது ஏற்று மைசூருவில் அம்பரீஷ் பெயரில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று குமாரசாமி அறிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.