இந்தியா

தாலியை ’நாய்ச்சங்கிலி’ எனக் குறிப்பிட்ட பேராசிரியர் மீது புகார்!

Sinekadhara

கோவா சட்டக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் ஷில்பா சிங் என்ற பெண் தாலியை நாய்ச் சங்கிலி எனக் குறிப்பிட்டதால் மதத்தை இழிவு படுத்தியதாக அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கோவாவில் உள்ள வி.எம். சல்கோகார் சட்ட கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் ஷில்பா சுரேந்திர பிரதாப் சிங். இவர் தனது ஃபேஸ்புக்கில்  பெண்கள் தாலி அணிவதை நாய்ச்சங்கிலியுடன் ஒப்பிட்டு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ராஸ்த்ரியா இந்து யுவ வாஹினியைச் சேர்ந்த ராஜிவ் ஜா என்பவர் பானஜி டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனால், அவர்மீது இந்திய சட்டப்பிரிவு 295ஏ-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜீ நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதவிர ஜா தன்னை தொடர்ந்து மிரட்டிவருவதாக சிங்கும் அவர்மீது புகார் கொடுத்துள்ளதாக மற்ற செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்த அகில் பாரதிய வித்யார்தி பரிஷாத் என்பவர் ஷில்பாவின் கல்லூரிக்குச் சென்று அவரை பணிநீக்கம் செய்யுமாறு நிர்வாகத்திடம் வற்புறுத்தி உள்ளார். ஆனால், அது அவருடைய தனிப்பட்ட விஷயம் எனக்கூறி பணிநீக்கம் செய்ய மறுத்ததாகவும் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

ஷில்பாமீது பிரிசு 295ஏ-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜா மீது இந்திய சட்டப்பிரிவு 504 மற்றும் 506இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ‘’என்னுடைய கருத்து மற்றவர்களை புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். ஆனால் சிறுவயதிலிருந்தே எனக்கு தாலி, புர்கா போன்ற சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை பின் தொடர்வதைப் பார்க்கும்போது எனக்குள் ஏன் என்ற கேள்வி எழுந்துகொண்டே இருக்கும். ஆனால் என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு என்னை மதத்திற்கு எதிரானவர் என்றும், நாத்திகர் என்றும் கூறுவது எனக்கு வருத்தமாக உள்ளது’’ என ஷில்பா கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.