இந்தியா

சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு 

webteam

சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு கேரள அரசு உரிய‌ பாதுகாப்பு வழங்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் கோயிலுக்கு சென்ற பிந்து என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்‌பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தியதால், சபரிமலையில் அசாதாரணமான சூழல் நிலவியது. 

இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றியுள்ளது. எனினும், இதற்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. வேறு அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் வழக்கை மாற்றியிருப்பதால், முந்தைய தீர்ப்பை அமல்படுத்த முடியாது என கேரள அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும், வர விரும்பினால், உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கடிதத்தை பெற்று வர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்தச் சூழலில், கடந்த ஆண்டை போலவே, இம்முறையும் சபரிமலை கோயிலுக்கு செல்லும் நோக்கில் கொச்சிக்கு வந்த புனேவைச் சேர்ந்த‌ சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் வந்த பிந்து என்‌ற பெண் மீது பக்தர் ஒருவர் மிளகு தூள் ஸ்பிரே அடித்து எதிர்ப்பை பதிவு செய்தார். 

இந்நிலையில், சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு வழங்க மறுத்து வருவதால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனக் கோரி, பிந்து மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.