இந்தியா

ரசகுல்லாவுக்கு போரா? ஒருவர் பலி; ஐவருக்கு படுகாயம் - ஆக்ரா கல்யாண வீட்டில் நடந்த களேபரம்.!

JananiGovindhan

சண்டை சச்சரவுகள் இல்லாத திருமணங்களை காண்பதே ஆச்சர்யமானதாகவே அண்மைக் காலமாக பார்க்கப்படுகிறது. சாதாரணமாக நிகழும் தகராறுகளை காட்டிலும் இந்த திருமண நிகழ்வுகளில் உருவாகும் பயனற்ற தகராறுகள், சமயங்களில் உயிருக்கே உலை வைத்துவிடும் அளவுக்கு இட்டுச் செல்கிறது.

அந்த வகையில்தான் ரசகுல்லாவுக்காக திருமண வீட்டில் நடந்த தகராறில் 22 வயது இளைஞர் இறந்த சம்பவம் உத்தர பிரதேசம் அருகே ஆக்ராவில் நடந்திருக்கிறது. அதன்படி ஆக்ராவை அடுத்த மொஹல்லா ஷைக்கான் என்ற பகுதியில் நேற்று (அக்.,26) உஸ்மான் என்பவரது மகளின் திருமணம் நடந்திருக்கிறது. அப்போது, பந்தியில் வைப்பதற்கான ரசகுல்லா தீர்ந்ததை அடுத்து மணமகள் மற்றும் மணமகன் தரப்பினர் இடையே வாய்த்தகராறு தொடங்கி கைகலப்பாக முடிந்திருக்கிறது.

இந்த சண்டையில், சன்னி என்ற 22 வயது இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அருகே இருந்த சமூக சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு ஆக்ராவில் உள்ள சரோஜினி நாய்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

அதன்படி அங்கு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சன்னி இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இதனிடையே கல்யாண வீட்டில் நடந்த தகராறில் மேலும் ஐவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர்களுக்கு அருகே இருந்த சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்ட எத்மத்புர் வட்டார காவல் அதிகாரி ரவிக்குமார் குப்தா PTI செய்தி நிறுவனத்துக்கு தகவல் கொடுத்திருக்கிறார். மேலும், இறந்தவர் சார்பில் இருந்து எந்த புகார் இதுகாறும் கொடுக்கப்படாததால் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் கொடுத்தால் விசாரிக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்.