இந்தியா

விமானத்துக்குள் திடீர் மோதல்... ஊழியரை தாக்கிவிட்டு அரைநிர்வாணமாக நடந்த பெண் பயணி?

webteam

இத்தாலியைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர், விமானத்தில் அரை நிர்வாணமாக நடந்துகொண்டதும், பெண் ஊழியரைத் தாக்கியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக விமானத்தில் நடைபெறும் சம்பவங்கள் சமூகவலைதளங்களில் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. அந்த வகையில், இத்தாலியைச் சேர்ந்த நேற்று (ஜனவரி 30) அபுதாபியில் இருந்து மும்பை நோக்கி சென்ற விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான UK 256 என்ற விமானத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பாவ்லா பெரூசியா என்ற பெண், மேற்குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்வதற்கு எகானமி பிரிவில் டிக்கெட் வாங்கியிருந்தார். விமானம் புறப்படுவதற்கு முன், அந்தப் பெண் அங்கிருந்த விமானப் பணிப்பெண் ஒருவரை அழைத்து, குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளார். அவர், `தற்போது இருக்கையில் அமருங்கள்; விமானம் புறப்பட்டதும் உங்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். அதுபோல், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அவருக்கு தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.

அதற்குள் அந்தப் பெண் தன் இருக்கையைவிட்டு எழுந்துபோய், பிசினஸ் வகுப்பு இருக்கையில் போய் அமர்ந்துள்ளார். `எதற்காக இருக்கையை மாற்றினீர்கள், உங்களுக்கு ஏதாவது தேவையென்றால் எங்களிடம் கேட்க வேண்டியதுதானே’ எனப் பணிக் குழு பெண் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு அவரது முகத்தில் அப்பெண் பயணி குத்தியுள்ளார். இதனால், அவரது முகத்தில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இதைப் பார்த்து மற்றொரு பணிப் பெண் அங்கு வர, அவர் மீதும் எச்சிலை உமிழ்ந்துள்ளார். இதில் அந்தப் பயணியால் சகப் பயணிகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கேப்டனுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பெண் பயணி அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், தன் ஆடைகளைக் கழற்றிவிட்டு அரை நிர்வாணமாக அங்குமிங்கும் ஆக்ரோஷமாக அலைந்து அனைவருக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் விமானத்தில் குப்பைகளைப் போட்டுள்ளார். இதையடுத்தே அவர், இருக்கையில் கட்டிவைக்கப்பட வேண்டியதாக விமான நிறுவன செய்திகள் தெரிவித்தன. பின்னர், விமானம் மும்பையை அடைந்ததும், மற்ற பயணிகளுக்கு முன்பாக அவர் இறக்கிவிடப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் மும்பை காவல்துறையால் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இவற்றை, அந்தப் பெண் பயணியின் வழக்கறிஞர் மறுத்துள்ளார். அவர் இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இது முற்றிலும் தவறானது. என் தரப்பு மனுதாரரான அப்பயணி, தன்னுடைய இருக்கையில் அசௌகரியமாக இருப்பதால் காலியாக உள்ள வேறொரு இருக்கை ஒதுக்குமாறு கேட்டியிருக்கிறார். இதற்கு ஊழியர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அத்துடன், குளியலறையைப் பயன்படுத்தவும் என் மனுதாரர் அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கும் அனுமதிக்கப்படவில்லை. இதனாலேயே, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் தீக்‌ஷித் கெடம், “நாங்கள் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். விசாரணைக்குப் பிறகு அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சக பெண் பயணியின் இருக்கையில் சங்கர் மிஸ்ரா என்பவர் சிறுநீர் கழித்த விவகாரத்தில், அந்த நிறுவனம் அலட்சியமாய் இருந்ததற்காக, டிஜிசிஏ ரூ.30 லட்சம் அபராதம் விதித்திருந்தது. மேலும் டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சங்கர் மிஸ்ராவுக்கு இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.