வங்கி ஊழியர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். பொதுத்துறை வங்கிகள் சார்பில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு சதவீதம் ஊதிய உயர்வை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 21 பொதுத்துறை வங்கிகள், 13 ஓல்டு ஜெனரேசன் தனியார் துறை வங்கிகள், 6 வெளிநாட்டு வங்கிகள் மற்றும் 56 பிராந்திய கிராமப்புற வங்கிகளின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்தத்தால் கேரளா, மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்புகள் அதிக அளவில் இருந்தன.
ஏடிஎம்களில் மதியத்திற்கு மேல் பணம் இல்லை. ஊழியர்கள் இல்லாததால் நாடு முழுவதும் பணப்பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊதிய உயர்வு தொடர்பாக நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்ததை அடுத்து இந்த இரண்டு நாள் போராட்டத்தை வங்கி ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.