இந்தியா

”இறந்த மகனுக்கு ஆயில் மசாஜ்..” - ஆக்சிமீட்டரால் 18 மாதங்களாக சடலத்துடன் வாழ்ந்த குடும்பம்!

JananiGovindhan

கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து பல்ஸ் ஆக்சிமீட்டர்களின் பயன்பாடு நாடெங்கும் பரவலாகவே அதிகரித்திருக்கிறது. அடிக்கடி பயன்படுத்துவதில் சமயங்களில் தவறான முடிவுகளும் அந்த ஆக்சிமீட்டர்களில் காண்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தன.

இப்படி இருக்கையில் ஆக்சிமீட்டர் ஒன்றின் தவறான கணிப்பால் இறந்துவிட்ட மகன் உயிரோடுதான் இருப்பதாக நினைத்து 18 மாதங்களாக சடலத்தை தாய் ஒருவர் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் கான்பூரில் அரங்கேறியிருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

கான்பூரில் ஒரு துயர சம்பவம்

கான்பூரைச் சேர்ந்த 35 வயதான விம்லேஷ் என்பவர் வருமான வரித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் ஏப்ரல் 22ம் தேதியே விம்லேஷ் இறந்திருக்கிறார். இதனையடுத்து மருத்துவமனை தரப்பில் இருந்து அவரது உடல் உறவினர்கள் வசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தாயார் உள்ளிட்டோர் விம்லேஷ் கோமாவில் இருப்பதாக எண்ணி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வீட்டிலேயே சடலத்தை வைத்திருந்திருக்கிறார்கள். ராவத்புர் பகுதியில் உள்ள கிருஷ்ணபுரியில்தான் விம்லேஷின் வீடு இருக்கிறது.

இறந்ததாக சொல்லியும் நம்பாதது ஏன்?

விம்லேஷின் தாய், அவரது மனைவி குழந்தைகள் என அனைவருமே விம்லேஷ் கோமாவில்தான் இருப்பதாக எண்ணி இறந்த உடலோடு வசித்திருக்கிறார்கள். இந்த நிலையில் வெகுநாளாகியும் விம்லேஷ் பணிக்கு வராததால் சந்தேகித்து கடந்த செப்டம்பர் 23ம் தேதி வருமான வரித்துறையினர் வீட்டுக்கே சென்று சோதித்த போதுதான் விம்லேஷ் இறந்ததும், அவருடைய சடலத்தோடு குடும்பத்தினர் வசித்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.

இது குறித்து விசாரித்த போது 2021 ஏப்ரல் 23ம் தேதி விம்லேஷின் உடல் ஒப்படைக்கப்பட்டதும் அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்ய முற்பட்ட போது அவரது உடலில் அசைவுகள் இருந்ததால் பல்ஸ் ஆக்சிமீட்டரை வைத்து சோதித்து பார்த்ததில் பல்ஸ் இருப்பதாக காட்டியிருக்கிறது. இதனை நம்பிதான் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

துர்நாற்றம் வீசாமல் இருந்தது எப்படி?

விம்லேஷின் உடலை நன்றாக கழுவி, டெட்டால் ஊற்றி சுத்தப்படுத்தியதோடு தினந்தோறும் காலை மாலை என ஆயில் மசாஜும் செய்து வந்திருக்கிறார்கள். இதுபோக விம்லேஷின் உடலுக்கு தினந்தோறும் துணி மாற்ற முடியாமல் போனதால் 24 மணிநேரமும் அவர் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏசியை ஓட விட்டிருக்கிறார்கள். இதனாலேயே இத்தனை மாதங்களாக அவர்களது வீட்டில் இருந்து எந்த துர்நாற்றமும் வீசாமல் இருந்திருக்கிறது.

வெளியே தெரிய வந்தது எப்படி?

இதனையடுத்து விம்லேஷின் வீட்டில் விசாரித்ததை அடுத்து, உண்மையிலேயே விம்லேஷ் உயிரோடுதான் இருந்தால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை வழங்கப்படும் என துணை தலைமை மருத்துவ அதிகாரியான கவுதம் கூறி, சிதைந்த விம்லேஷின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று நிஜமாகவே இறந்ததாக சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகே விம்லேஷிற்கு இறுதிச் சடங்குகளை அவரது குடும்பத்தினர் நடத்தியிருக்கிறார்கள்.