ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வென்றதை அடுத்து கடந்த ஜூன் 4ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் பூமிக் லட்சுமணனும் (21) ஒருவர். இவரது இழப்பு குடும்பத்தினருக்கு பெரும் இடியை இறக்கியுள்ளது.
பூமிக் லட்சுமணனின் இறுதி சடங்கு கடந்த 7 ஆம் தேதி முடிந்த நிலையில், அவரை கல்லறையில் அடக்கம் செய்த அவரது தந்தை கல்லறை மீதே படுத்து கதறி அழும் காட்சிகள்தான் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
இந்த வீடியோவை கர்நாடக பாஜக தனது அதிகாரப்பூர்வ 'X' பக்கத்தில் பகிர்ந்துள்ளது . இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், "மகனின் சமாதியில் நானும் தங்கி விடுகிறேன். என்னை இங்கேயே விட்டுவிடுங்கள்" என்று பூமிக்கின் தந்தை கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது
இதுகுறித்து பாஜக வெளியிட்டுள்ள பதிவில், "கொலைகார முதல்வர் சித்தராமையா, கொலைகார துணைத் தலைவர் டி.கே.சிவகுமார் முடிவு செய்திருந்தால், ஒரு ஆடம்பர ஹோட்டலில் உங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கோப்பையுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம். ஆனால் உங்கள் பிடிவாதத்தால் 11 குடும்பங்கள் தினமும் கண்ணீரில் கதற வேண்டியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
” பெங்களூரு கூட்ட நெரிசலில் எனது ஒரே மகனை இழந்துவிட்டேன். எங்களை பொறுத்தவரை அவன் தங்க மகன். அவனுக்கு திரைப்படம் மீதோ, கிரிக்கெட் மீதோ மோகம் கிடையாது. நண்பர்கள் வற்புறுத்தியதால் அவர்களோடு சேர்ந்து சின்னசாமி ஸ்டேடியத்துக்கு சென்றுள்ளான். இளம் தலைமுறையினர் நண்பர்களின் பேச்சை கேட்டு நடக்கக்கூடாது. பெற்றோரின் சொல்லுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். உடன் சென்ற நண்பர்கள் அனைவரும் உயிர்தப்பி விட்டனர். எனது மகன் மட்டும் உயிரிழந்து உள்ளார்.
ஆர்சிபி-யின் வெற்றி கொண்டாட்டத்துக்கு எனது மகனை பறிகொடுத்து விட்டேன். கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் தங்களது குடும்பத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். சமானிய பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் வெற்றி கொண்டாட்டத்துக்கு ஏன் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு தரப்பினர் பணம் சம்பாதிக்க, மக்களின் உயிர்களை பறிப்பது ஏன்?
கர்நாடக அரசு தரப்பிலோ, ஆர்சிபி அணி தரப்பிலோ எனது குடும்பத்தினரை யாரும் சந்திக்கவில்லை. அவர்களது தவறுகளால் எனது ஒரே மகனை இழந்து தவிக்கிறேன். மகனின் எதிர்காலத்துக்காக நிலத்தை வாங்கி வைத்திருந்தேன். அந்த இடத்திலேயே அவனை இப்போது அடக்கம் செய்திருக்கிறேன். என்னைப் போன்ற நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது.
எனது மகனை சிறுவயது முதலே ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் வளர்த்தேன். ஆனால் கல்லூரியில் சேர்ந்த பிறகு அவன், நண்பர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை அளித்தான். அதுவே அவனது உயிரை பறித்துவிட்டது. இளைய தலைமுறையினர் அவர்களின் பெற்றோரின் ஆலோசனைப்படி நடக்க வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இன்ஜினீயரிங் கல்லூரி இறுதி ஆண்டு மாணவரான பூமிக் லட்சுமணன், குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்காமல் ஆர்சிபி வெற்றி விழாவில் பங்கேற்று உள்ளார். அவரது உயிரிழப்பு குடும்பத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.